ஏப். 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதல்வர்
ஏப்ரல் 1 ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வெள்ள காலங்களில் மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது வெளியேற்றப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சேலம் மாவட்டம், சரபங்கா நீரேற்று திட்டத்தின் மூலம் 100 வறண்ட ஏரிகளில் மேட்டூர் அணையின் உபரி நீரை நிரப்பும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி அன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதி, இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி பகுதியில் அடிக்கல் நாட்டினார்.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.மேலும் இந்த விழாவில் 62.63 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 36 பணிகளை திறந்து வைத்தும், ரூ. 5 கோடியே 36 லட்சம் மதிப்பில் 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து விழாவில் முதல்வர் பேசும்போது, அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
நீர்மேலாண்மையில் தமிழகம் 2019-20ம் ஆண்டிற்கான தேசிய விருது பெற்றுள்ளோம் என்று கூறிய அவர், ரூ. 14,400 கோடியில் காவிரி குண்டாறு திட்டம் அடிக்கல் நாட்டி உள்ளோம் என்றும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு ரூ. 10,711 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். அதிமுக அரசு வேளாண் மக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்கும் அரசாக உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu