சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று (10.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 5.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வீரகனூரில் 4.8 செ.மீ., ஆத்தூர் 2.8 செ.மீ, பெத்தநாயக்கன்பாளையம் 2.5 செ.மீ., கெங்கவல்லி 1.35 செ.மீ., ஏற்காடு பகுதியில் 1.2 செ.மீ, சேலம் மாநகராட்சி பகுதியில் 0.9 செ.மீ, மேட்டூர் 0.38 செ.மீ, எடப்பாடியில் 0.94 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 25.3 செ. மீ மழை பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்குப் பிறகு திருமணிமுத்தாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. செங்கல் அணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம், நாராயண நகர், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, ஐந்து ரோடு, நான்கு ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை சேலம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்