மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி: சேலம் மாணவி ஆட்சியரிடம் புகார் மனு

மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி: சேலம் மாணவி ஆட்சியரிடம் புகார் மனு
X

தனது பெற்றேருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கஸ்தூரி.

மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரிக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தறித் தொழிலாளியான பழனிச்சாமி. இவரது மகள் கஸ்தூரி, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து விட்டு 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெளியான தரவரிசை பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் இடம் பெற எம்பிசி பிரிவில் 230 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது. ஆனால் கஸ்தூரி 252 மதிப்பெண்கள் பெற்றும் இவரது பெயர் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் பெறாமல் பொது பிரிவு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் 230 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்கள் இட ஒதுக்கீடு பட்டியிலில் இடம்பெற்றுள்ள போது, 252 மதிப்பெண்கள் பெற்ற தனது பெயர் இடம்பெறவில்லை எனக் கூறி, கஸ்தூரி தனது பெற்றேருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மருத்துவம் பயின்று ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற தனது கனவு நிறைவேற தமிழக அரசு அறிவித்த படி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு