சசிகலா எத்தனை பொய் சொன்னாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டபுரத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நிவாரண நிதியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். தற்போது அதற்கு மாறாக, ஒரு குழு அமைக்கப்பட்டு விவரங்கள் பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். திமுக தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கான பதில் வழங்காமல் மழுப்பி வந்தனர்.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அச்சப்பட்ட நிலையில், அன்றைய காலகட்டத்தில் எதிர்கட்சிகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்தின. இருப்பினும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வந்தோம். ஒரு குப்பிக்கு 10 முதல் 20 தடுப்பூசிகள் வரை செலுத்தமுடியும். அதில் ஆறு நபர்கள் வரும் பட்சத்தில் மீதமுள்ளவை மக்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் போனது. வேண்டுமென்றே தடுப்பூசிகளை வீணடிக்கப்படவில்லை.
மூன்றாம் அலை வருவதற்கு முன்பாக விழிப்போடு இருந்து, தடுப்பூசி செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு தடுப்பூசிகள் பெறப்பட்டது, எவ்வளவு மக்களுக்கு போடப்பட்டுள்ளது என்பது குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.
சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பில்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம். தெளிவுபடுத்திவிட்டோம். சசிகலா வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகிறார். எவ்வளவு தவறான கருத்துக்களைப் பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. ஏற்கனவே எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறுபவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறுகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான கருத்தை பரப்பி வருகிறார். இதை, மக்கள் நம்பத் தயாராக இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu