சேலம் – விருத்தாசலம் ரயில் எஞ்சின் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

சேலம் – விருத்தாசலம் ரயில் எஞ்சின், ஆத்தூரில் பழுதாகி நின்றதால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலம் - விருத்தாசலம் அதிவிரைவு ரயில், கடந்த ஜூன் 1ம் தேதி முதல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி வழியாக தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினசரி காலை 6 மணிக்கு விருத்தாசலத்தில் புறப்பட்டு 7,30 மணிக்கு ஆத்தூர் வழியாக 9,30 மணிக்கு சேலம் சென்றடையும்; மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும்.

இந்த சூழலில், சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு செல்ல பயணிகளுடன் மாலை, 6 மணிக்கு புறப்பட்ட ரயில் 7-30 மணிக்கு ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் புறப்பட்ட ரயிலில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது; சிறிது தூரம் சென்றவுடன் பாதியிலேயே நின்றது.

இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். மாற்று எஞ்சின் வர தாமதமானதால் பழுதான ரயிலை பின்புறமாக இயக்கி, ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மாற்று ரயில் எஞ்சின் வராததாலும் கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாததாலும் உணவின்றி ஆத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள், கடும் அவதிக்குள்ளாகினர்; ரயில்வே ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு ரயில், விருத்தாசலம் புறப்பட்டு சென்றது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!