சேலம் மாவட்ட புறநகர் அம்மா பேரவை செயலாளர் வீட்டில் பணம் பறிமுதல்

சேலம் மாவட்ட புறநகர் அம்மா பேரவை செயலாளர்  வீட்டில் பணம் பறிமுதல்
X

இளங்கோவன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர். 

சேலம் மாவட்டம் புறநகர அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் வீட்டில் பறக்கும் படையினர் 50,000 பணம் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டு வந்த, சேலம் அதிமுகவின் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து இன்று அவரது வீட்டிலும், தோட்டத்தில் உள்ள வீட்டிலும் தேர்தல் பறக்கும் படையினர் முருகையன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 50,000 பணத்தை பறிமுதல் செய்து, தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் இறுதிகட்டத்தில் பணம் கொடுக்க வாய்ப்புள்ள சூழ்நிலை உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!