ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 380 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, பச்சமலை, தவளப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, லாரி டியூப்கள் மூலமாக இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், தம்மம்பட்டி, கூடமலை, வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது.

புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து சாராய வேட்டையில் ஈடுபட்டு தினந்தோறும் கள்ளச்சாராயம் கடத்துபவர்களை பிடித்து கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையம் பூங்கா, புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தூர் ஊரக போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கல்வராயன்மலையில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து பிரவீன்குமார், சக்தி, துரைசாமி,வெற்றிவேல் ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 320லிட்டர் சாராயம் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தலைவாசல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நாவக்குறிச்சி மற்றும் காட்டுக்கோட்டை பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த சுரேஷ், முருகேசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!