ஆத்தூர் அருகே 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியது. இதனால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. தற்போது 27, மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும், கள்ளச்சாராய உற்பத்தி பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, பச்சமலை, தவளப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், தம்மம்பட்டி, கூடமலை, வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினாஷ் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கேஷ் குமாருக்கும் புகார் சென்றது.
அவர்களது உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் , ஆய்வாளர் வளர்மதி மற்றும் ஆத்தூர் மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வராயன்மலை வனப்பகுதியில் உள்ள கீழ்நாடு, மேல்நாடு, கருமந்துறை, குன்னூர், ஆடியநூர், செம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கடந்த மூன்று நாட்களாக கண்காணித்து வந்தனர்.
இதில்,சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக வனப்பகுதியில் போடப்பட்டிருந்த சுமார் 2400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அதனை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே அழித்தனர்.வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாராய ஊறல் போட்டிருந்த மர்ம நபர்களை, மதுவிலக்கு பிரிவு போலீசார் கல்வராயன்மலை பகுதியிலே முகாமிட்டு தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu