சேலத்தில் காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரம்: எஸ்எஸ்ஐ கைது
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி
சேலம் ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் காவல்துறையினர் சோதனையில் இருந்தபோது, சேலம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை, நேற்று, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கடுமையாக தாக்கினார். இதில், படுகாயமடைந்து உயர் சிகிச்சைக்காக, சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக முருகேசனின் சகோதரர் துரைசாமி அளித்த புகாரின் பெயரில் சிறப்பு எஸ்ஐ மீது கொலை வழக்கு பதிவுசெய்து பெரியசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, முருகேசன் உறவினர்களிடம், சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர், பத்து மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, அவர்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து முருகேசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து, பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில், முருகேசனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஏராளமானோர் குவிந்து இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu