சேலம் அருகே ஜல்லிக்கட்டு: 600 வீரர்கள் பங்கேற்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் நடைபெறும். அதன்படி சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சேலம், திருச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 120 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு முறையாக உடல்தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ராமன் முன்னிலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து மற்ற காளைகளும் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வந்தன. ஒவ்வொரு சுற்றுக்கும் 100 வீரர்கள் என களத்தில் இறக்கி விடப்பட்டனர்.
துள்ளிக்குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் விரட்டிச் சென்று திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுடன் போட்டி போட்டு விளையாடியது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகணிகர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu