ஸ்டாலினுக்கு நாட்டு நடப்புகள் தெரிவதில்லை: முதலமைச்சர் பழனிச்சாமி
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அதிமுக மகளிர் பூத் கமிட்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆத்தூர் கெங்கவல்லி ஏற்காடு மற்றும் வீரபாண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியதாவது,
உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நின்று பேசுகிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவர் முதலமைச்சராக இருந்தால் எவ்வளவு சந்தோசப்படுவீர்களோ அந்த சந்தோசம் எனக்கும் உள்ளது. தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் முதலமைச்சர் மாவட்டம் என்ற பெருமை சேலத்திற்கு கிடைத்துள்ளது. ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கிய திட்டம் காலத்தால் அழிக்க முடியாத திட்டம். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அறிவித்தார் ஜெயலலிதா. துரதிஷ்டவசமாக அவர் மறைந்து விட்டாலும் அவர் வழியில் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பொருளதார சிக்கலால் பெண்களின் திருமணம் தடைபடக்கூடாது என தாலிக்கு தங்கமும் திருமண உதவித்தொகையும் வழங்கியவர் ஜெயலலிதா.
கொரோனோ பரவிய இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் விலையில்லா அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. ஏழைக் குழந்தைகளும் சுகாதாரமாக வாழவேண்டும் என்பதற்காக 16 பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம் வழங்கப்படுகிறது. 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்க அம்மா மினி கிளினிக் போல திமுக ஆட்சியில் ஏதேனும் திட்டம் நிறைவேற்றியுள்ளார்களா?
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக திட்டங்களை அறிவிக்கவில்லை. மக்களின் சூழ்நிலையை அறிந்து பொங்கல் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்தோம். இதை கூட தடுக்க ஸ்டாலின் முயற்சித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. அரசிடம் கூட அந்த மனுக்களை ஸ்டாலின் கொடுக்கவில்லை. மனுக்களை வாங்குகிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். சாயம் வெளுத்து விட்டது; மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாதவர் ஸ்டாலின் நாட்டில் என்ன நடக்குது என்பதே தெரியாமல் இருக்கிறார் ஸ்டாலின்.1100 மூலமாக மக்கள் பிரச்னையை தீர்க்கும் திட்டம் 2020 சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.
52 லட்சம் மாணவ மாணவியருக்கு ரூ 12000 மதிப்பிலான மடிகணிணி வழங்கப்பட்டுள்ளது. குடிசையில் பிறக்கும் குழந்தைகளும் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா ஆட்சியிலிருந்து தற்போது வரை 17 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிகாலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவியது. மின்மிகை மாநிலமாக திகழ்கிறது தமிழகம். நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி. ஸ்டாலின் கூறுவது போல் நான் மந்திரவாதியாக இருந்திருந்தால் அவர் பேசிருக்கவே மாட்டார் தப்பு செய்தவரை தட்டிக் கேட்டால்தான் தலைவன், தட்டிக் கேட்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின். அவர் தமிழகத்திற்கு தேவையா? பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கட்சி அதிமுக. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மக்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுமக்களை பற்றி சிந்திக்காமல் வீட்டு மக்களைப்பற்றி சிந்திக்கும் ஸ்டாலினுக்கு நாட்டு நடப்புகள் தெரிவதில்லை என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu