ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்: சேலத்தில் அசத்தல் ஆஃபர்!
ஹெல்மெட் வாங்கிய வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கிய நடிகர் பெஞ்சமின். அருகில் கடை உரிமையாளர்.
தமிழகத்தில் தொடர் மழையால், தக்காளி விளைச்சல் குறைந்துள்ள, அதன் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து சரிந்ததால், கடந்த வாரம் ஒரு கிலே 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இந்த நிலையில், பொதுமக்களை கவரும் விதமாக ஹெல்மெட் வாங்குவோருக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என, சேலம் ஹெல்மெட் கடை உரிமையாளர் அறிவிப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சேலம் கோட்டை பகுதியில் ஜம்ஜம் ஹெல்மெட் என்ற பெயரில் ஹெல்மட் கடை நடத்தி வரும் முகமது காசிம் தான், இத்தகைய அறிவிப்பை செய்துள்ளார்.
ஹெல்மெட் அவசியம் மற்றும் விவசாயத்தை காப்போம் என்பதை முன்வைத்து, 449 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஹெல்மெட் வாங்கினால், ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவித்துள்ளார். இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு மட்டுமே, இந்த சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளார். இதன் முதல் விற்பனையை திரைப்பட நடிகர் பெஞ்சமின், இன்று துவக்கி வைத்தார்.
முகமது காசிம் கூறுகையில், தலைக்கு ஹெல்மட் எவ்வளவு அவசியமோ அதுபோல, சமையலுக்கு தக்காளி என்பது முக்கியம். தற்போது தக்காளி விலை 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , விவசாயத்தை காப்போம் என்பதை வலியுறுத்தியும் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பு, சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu