நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்
பைல் படம்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14ம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் முருகன் (வயது 23) மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu