தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள் எவைகள்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள் எவைகள்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!
X

கன்னியாகுமரி மாவட்டம்.

இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது பணக்கார மாநிலம். தமிழகத்தில் பணக்கார மாவட்டங்கள் எவை ?.

தமிழகத்தின் பணக்கார மாவட்டங்கள் எவை என்று கேட்டாலே நாம் அனைவரும் முதலிடத்தில் சென்னையோ அல்லது கோவையோ தான் இருக்கும் எனச்சொல்லத் தோன்றும். ஆனால் தமிழகத்தின் முதல் ஐந்து பணக்கார மாவட்டங்களின் பட்டியலிலும் இந்த இரண்டு மாவட்டங்கள் இல்லை. வேறு எந்தெந்த மாவட்டங்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன என்று பார்ப்போமா?

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு ஒரு வளமான மாநிலமாக இந்தியாவில் இருப்பதற்கு தொழில்துறை, ஏற்றுமதி, விவசாயம் என அனைத்திலும் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவது தான் காரணம். ஆனால் இந்த நற்பெயர் எல்லாமே தமிழகத்தின் மாவட்டங்களை தான் சேரும். தொழில்துறை, உற்பத்தி, ஆலைகள், ஏற்றுமதி, விவசாயம் என மாவட்டத்தின் வருமானம் கணக்கிடப்படுகிறது. மொத்த வருமானத்தையும் ஒன்று கூட்டி அதனை அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை கொண்டு வகுத்தால் சராசரி தனி நபர் வருமானம் தெரிந்து விடும். அதில் எது மிகுதியாக இருக்கிறதே அதுவே பணக்கார மாவட்டமாகும்.

முதலிடத்தில் ஏன் சென்னை இல்லை. பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும், உற்பத்தி ஆலைகளும், மேலை நாட்டு கலாசாரத்துடன் அதிக சம்பளம் பெற்று வாழும் மக்கள் சென்னையில் தான் அதிகம் இருக்கின்றனரே, ஏன் சென்னை முதலிடத்தில் வரவில்லை என்று நீங்கள் நினைக்கலாம்.

சென்னை எந்த அளவிற்கு வளமான மக்களை கொண்டுள்ளதோ அதே அளவிற்கு ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் கொண்டுள்ளது. அதிகப்படியான மக்கள் இங்கு வாழ்வதால் சராசரி கணக்கிடுகையில், தனி நபர் வருமானமும் குறைகிறது. மற்ற மாவட்டங்களுக்கு இந்த பிரச்னை இல்லை. இதனால் பட்டியல் மாறுகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தின் பணக்கார மாவட்டங்களில் முதலிடம் வகிப்பது கன்னியாகுமரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழுகின்றனர். தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். அதே மாதிரி இந்த மாவட்ட மக்கள் கேரள அரசுப் பணிகளிலும் நிறைய பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும் இந்த ஊர் மக்கள் தான். ரப்பர் ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதுடன், மீன்வளம், விவசாயம், சுற்றுலா என எல்லாவற்றிலும் கன்னியாகுமரி கலக்கி வருகிறது. கன்னியாகுமரியின் தனிநபர் வருமானம் ரூ.81,094, இது தான் தமிழகத்திலேயே அதிகமான தனி நபர் வருமானம் ஆகும்.

இரண்டாம் இடத்தில் ‘டாலர் நகரம்' என்று பிரபலமாக அறியப்படும் திருப்பூர் உள்ளது. இந்தியாவின் பின்னலாடை தொழில் மையமாக உள்ளது. இந்தியாவின் இந்த பின்னலாடை தலைநகரில் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரமாக இருந்த திருப்பூர் இப்போது இரண்டாவது பணக்கார மாவட்டமாக வளர்ந்துள்ளது. திருப்பூரின் தனிநபர் வருமானம் ரூ.72,479 ஆகும்.

மூன்றாம் இடத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை நம்பியே உள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த தொழிலாளர்களில் சுமார் நாற்பத்தேழு சதவீதம் பேர் விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது மட்டுமே திருவள்ளூரின் வாழ்வாதாரம் இல்லை, ஆவடி, அம்பத்தூர் தொழில்பேட்டைகளில் இருக்கும் மெட்ராஸ் ரிஃபைனரீஸ், மெட்ராஸ் ஃபெர்டிளைசர்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், MRF, அசோக் லெய்லேண்ட், பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற மாவட்டங்கள் திருவள்ளூரை மூன்றாவது பணக்கார மாவட்டமாக மாற்றியுள்ளது. ரூ.70,778 திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானமாகும்.

தமிழ்நாட்டின் நான்காவது பணக்கார மாவட்டமாக விருதுநகர் ரூ.70,689 தனி நபர் வருமானத்தை கொண்டுள்ளது. விருதுநகர் நான்காவது இடத்தில் இருப்பது நம்மில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், ஆயில், காபி, தானியங்கள் மற்றும் மிளகாய் உற்பத்தி செய்வதுடன், ஸ்பின்னிங் மில்கள், கைத்தறி ஆலைகள் பட்டாசு தொழிற்சாலைகளுடன் விருதுநகர் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

ஐந்தாம் இடத்தில் இருப்பது காஞ்சிபுரம். இந்த மாவட்டம், நீண்ட காலமாக இந்தியாவின் புனித நகரமாக கிட்டத்தட்ட ஆயிரம் கோயில்களைக் கொண்டுள்ளது. மெதுவாக அது ஒரு சாதகமான வணிக தலமாகவும் மாறி வருகிறது. முக்கியமாக விவசாயம் மற்றும் பட்டு தொழில் துறைகள் காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் மற்றொரு முக்கிய தொழில் சுற்றுலாத் துறையாக இருக்கிறது. காஞ்சிபுரத்தின் தனிநபர் வருமானம் ரூ.70,667 ஆகும்.

ஆறாம் இடம் கோவை- ரூ.65,781.

ஏழாம் இடம்: திருச்சி - ரூ.65,011.

எட்டாம் இடம்: துாத்துக்குடி- ரூ 63,467.

ஜவுளி நகராம் ஈரோடு (ரூ.61,631) ஒன்பதாம் இடத்தைப் பிடிக்கிறது

கைத்தறி நகரம் கரூர் (ரூ.61,181) பத்தாம் இடத்தில் இருக்கிறது.

நாமக்கல் (ரூ.58,133) பதினொன்றாம்

இடத்தில் இருக்கிறது. தலைநகர் சென்னை - ரூ.57,706 தனிநபர் வருமானத்துடன் 12 ஆம் இடத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. பாவம் பிற மாவட்டங்கள் முன்னும் பின்னும் அல்லாடிக்கொண்டுள்ளன. மாவட்டங்கள் வளமாக இருக்கட்டும். ஆனால், அனைத்து மக்களும் சமமான வருமானத்துடன் வளமாக வாழ்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது !!!???

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!