நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க முதல்வருக்கு கோரிக்கை
அக்டோபர் 2021 முதல் இன்று வரை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 350 ஆம்னி பேருந்துகளால் அரசுக்கு 21 கோடி ரூபாயும், பேருந்து உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாயும் இழப்பும் ஏற்பட்டுள்ள பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அ. அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் அளித்த மனு விவரம்:
கடந்த 04.03.2020க்கு முன்பு தமிழகத்தில் தினசரி 4000 ஆம்னி பேருந்துகள் இயங்கின. நாள்தோறும் 1,25,000 பயணிகள் சேவையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதன்பின் கொரோனா நோய் தொற்றால் ஆம்னி பேருந்து தொழில் பாதிப்படைந்து 1600 பேருந்துகள மட்டுமே தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 26 மாதங்களாக ஆம்னி பேருந்து தொழிலில் உள்ள 570 உரிமையாளர்களில் பொருளாதார நெருக்கடியால் 15 உரிமையாளர்கள் மாரடைப்பு ஏற்பட்டும் 10 உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் தொழில் சார்ந்த வாகன வாகன உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், டயர் உற்பத்தியாளர்கள், பேருந்து கட்டுமான செய்பவர்கள், டிராவல் ஏஜெண்டுகள், மெக்கானிக், ஏசி மெக்கானிக், எலக்ட்ரீசியன், பெயிண்டர்,டயர்மேன், சலவை தொழிலாளர்கள், வாட்டார் வாஷ் செய்பவர்கள் என 12 லட்சம் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் தவித்து வருகின்றனர்.
கொரோனா 2வது பாதிப்பால் கடந்த ஏப்ரல் 2021 முதல் மத்திய மாநில அரசு விதித்த கட்டுப்பாடு மற்றும் முழு ஊரடங்கால் பொது போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டதால் 100 சதவீதம் ஆம்னி பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந் தது. பிறகு Stoppage-ல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 1300 பேருந்துகளில் 850 பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஆம்னி பேருந்துகளை உரிய வரி செலுத்தி இயக்க பேருந்து உரிமையாளர்கள் 2021 நவம்பர் 4ந்தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும் பொதுமக்கள் நலனைக்கருதியும் நவம்பர் 2021 முதல் போக்குவரத்து ஆணையரிடம் பேருந்தை இயக்க தயாராக உள்ளதாக கடிதம் கொடுத்தும் இன்று வரை இது சம்பந்தமாக முடிவு எடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.
இதனால் அரசுக்கு ஒரு பேருந்திற்கு சராசரியாக ஒரு காலாண்டிற்கு 1,20,000.00 வீதம் சாலை வரி 4,20,000,00.00 இழப்பு ஏற்பட்டு 5 காலாண்டிற்கு 21,00,000,00.00 அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுக்காரணமும் போக்குவரத்துத்துறை அனுப்பிய கோப்பின் மீது நிதித்துறை எந்த முடிவு எடுக்காமல் மெத்தனப் போக்குடன் 9 மாதம் கால தாமதம் செய்து அரசுக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள உரிமையாளர்கள் மற்றும் 12 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
கொரோனாபாதிப்பு குறைந்த நிலையில் 01.10.2021 முதல் ஆம்னி பேருந்துகளை எடுத்து இயக்க பலமுறை கோரிக்கை வைத்தும் போக்குவரத்துதுறை அமைச்சர் பல முறை நிதித்துறைக்கு பரிந்துரைத்தும் இன்று வரை இயக்க அனுமதி கிடைக்கவில்லை.
01.04.2020 கொரோனா பாதிப்பில் பொது போக்குவரத்து தடைசெய்யப்பட்ட போது ஆம்னி பேருந்துகளுக்கு Stoppage-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்துதுறை ஆணையர் அவர்களே Stoppage விண்ணப்பத்தை அனுமதித்து Nil Assessment செய்து கொடுத்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதித்தார்கள். ஆனால் கொரோனா 2வது (2021) பாதிப்பில் மட்டும் அரசிடம் அனுமதி கேட்டு அனுமதிக்கிறோம் என கூறி ஒரு வருடமாக காலதாமதம் செய்கிறார்கள். இந்த பேருந்துகளை எடுத்து இயக்க அனுமதித்தால் ஒரு காலாண்டிற்கு சுமாராக 4 கோடி 20 லட்சம் வீதம் வருடத்திற்கு சுமாராக 16.8 கோடி அளவிற்கு சாலை வரி மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இந்த பேருந்துகளை இயக்க அனுமதியளிக்காததால் அரசுக்கு 21 கோடி ரூபாயும் பேருந்து உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா மற்றும் மாநிலங்களில் இன்று வரை Stoppage விண்ணப்பத்தை அனுமதித்து Nil Assessment செய்து கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு வருட காலமாக முடிவு எடுக்காமல் நிதித்துறையால் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இந்தப் பேருந்துகள் கடந்த 1 வருட காலமாக இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் மோசமாக பழுதடைந்தும், வங்கிக் கடனும் செலுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்கள் மூலமாக புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் ஒரு சில அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இந்தத் துறை முற்றிலும் அழியும் ஆபத்தில் உள்ளது . இதனால் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை சுற்றுலாத்துறை பாதிக்கபடுவதுடன், இத்துறை சார்ந்தவர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.
ஆகவே தமிழக முதலமைச்சர் தலையிட்டு இயங்காத ஆம்னி பேருந்துகளுக்கு, இயங்காத காலங்களுக்கு சாலை வரியை ரத்துசெய்து இயக்க அனுமதித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களையும் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிட முன் வர வேண்டும்.
இப்பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு வழங்காத பட்சத்தில், யாருக்கும் பயனின்றி பழுதடைந்து வரும் ஆம்னி பேருந்துகளை அரசிடமே ஒப்படைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu