தென் மாவட்டங்களுக்கு தைப் பொங்கலுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை.
விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு, தைப்பொங்கல் பண்டிகைக்காக கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தைப்பொங்கல் பண்டிகைக்கு, இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்புகளுக்காக சென்றிருக்கும் தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக, தெற்கு ரயில்வே கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் பெற்று வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு வந்து செல்வது வழக்கம். இதற்காக அவர்கள் பெரும்பாலும் நம்பி இருப்பது ரயில்களைத்தான். தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் பெரும்பாலும் ,மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
அல்லது வாரம் ஒரு முறை மட்டும் என்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வந்தேபாரத் ரயில் கூடுதலாக இரண்டு நேரங்களில் இயக்கப்பட்டதைப் போல, பொங்கல் பண்டிகைக்கும் கூடுதலாக இயக்க வேண்டும். மேலும், மேட்டுப்பாளையம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை பொங்கல் பண்டிகை வரை கூடுதலாக இயக்க வேண்டும். மதுரை வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில்களை, பொங்கல் பண்டிகை மற்றும் பண்டிகை முடிந்த ஒரு வார காலத்திற்கு மட்டுமாவது விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரயில்கள் இயக்கப்பட்டாலும் அவை அனைத்துமே ஹவுஸ்புல் ஆக நிரம்பி வழிவதால் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கினால் ரயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது வணிக ரீதியிலான கருத்தாகும். எனவே இந்த கருத்தினை உடனடியாக ரயில்வே இலாகா அமல்படுத்த முன்வரவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu