வீடுகள், கடைகளில் மின்கட்டணம் திடீரென அதிகரிக்க காரணம் என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் இன்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றாக மாறி உள்ள மின்கட்டணம் அதிகரிக்க மின்வாரிய ஊழியர்களே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படும். (அதனை மாதம் ஒருமுறை கணக்கெடுப்பாக மாற்றுவோம் என்பது தி.மு.க., தந்த உறுதிமொழிகளில் ஒன்று.) கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மின்சார கணக்கெடுப்பு பணிகள் தடையின்றி நடந்தன. அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கின் போது, மருத்துவத்துறை, போலீஸ்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம் என பல்வேறு அரசுத்துறைகள் பணிபுரிந்தன. ஆனால் மின்வாரியத்தில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று மின்சாரம் கணக்கெடுப்பு நடத்துபவர்கள் மட்டும் பணிபுரியவில்லை.
குறிப்பாக மார்ச் மாதம் கணக்கெடுத்தவர்கள், அடுத்து மே மாதம் கணக்கெடுக்க வேண்டும். ஆனால் மே மாதம் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. இதனால் அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதற்கு பதிலாக கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் ஒவ்வொரு மின் இணைப்பு எண்ணுக்கும் எவ்வளவு பணம் செலுத்தியிருந்தார்களோ அந்தப்பணத்தை மின்கட்டணமாக வசூலித்தனர்.
இப்போது கணக்கெடுக்கும் போது மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களுக்கு சேர்த்து ஒரே பில் வந்துள்ளது. இந்த பில் பணத்தில் அந்த மின் இணைப்பு எண்ணுக்கு ஏற்கனவே வசூலித்த பணத்தை கழித்துக் கொண்டு தான் கணக்கீடு செய்துள்ளனர். மின்கட்டணத்தை பொறுத்தவரை கட்டணம் உயரவில்லை தான். ஆனால் இந்த காலகட்டத்தில் மின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டண டேரிப்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
குறிப்பாக மின் பயன்பாட்டுக்கட்டணம் 499 யூனிட் வரை ஒரு டேரிப் என்றால், அது ஒரு யூனிட் அதிகரித்து 500 யூனிட் ஆக மாறினால் அடுத்த டேரிப்பிற்கு மாறி விடுகிறது. இதனால் கட்டணம் பகீர் என அதிகரிக்கிறது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் என அத்தனை பேரும் பாகுபாடு ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் எழுந்த விமர்சனங்களை சமாளிக்க அரசு எவ்வளவோ முயன்றும், அரசுக்கு எதிராக எழுந்துள்ள மக்களின் கோபம் கட்டுக்குள் வரவில்லை என்பதே முழுமையான உண்மை. இந்த பிரச்னையை சரி செய்ய மின்துறை அமைச்சர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆகவே மக்களின் இந்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை தந்து செயல்பட்டுவரும் தமிழக முதலமைச்சர் இந்த மின் கட்டண விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே மக்கள் எண்ணம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu