அரிதான விலங்கு தேவாங்குக்கு பாதுகாப்பின்மை: சரணாலயம் அமைக்க வேண்டுகோள்

அரிதான விலங்கு தேவாங்கு.(படம் விக்கிபீடியா)
தமிழக அரசு கடவூர் ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்க வேண்டும் அல்லது முன்மொழியப்பட்ட சிறப்பு இனங்கள் மீட்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கரூர் கலெக்டர் டாக்டர்.பிரபுசங்கர்
மத்திய தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் பகுதியில் கடவூர் ரிசர்வ் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த காடுகள், கூச்ச சுபாவமுள்ள மற்றும் தனிமையை விரும்பும் ஒரு வகை மென்மையான லோரிஸ் எனப்படும் தேவாங்கு விலங்குகளுக்கு தாயகமாக விளங்குகிறது. இப்பகுதியில் மட்டுமே வாழும் சிறப்பினமான இந்த தேவாங்குகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, திருச்சிராப்பள்ளி வனப்பிரிவின் கட்டுப்பாட்டில், கரூர் வனப்பகுதியின் வனப்பகுதி அலுவலரால் இந்த வனப்பகுதி நிர்வகிக்கப்பட்டு வந்தது. கரூர் வருவாய் மாவட்டம் உருவான பிறகு, கரூர் வனப்பிரிவு 1997 இல் உருவாக்கப்பட்டது. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ் (TAP) கடவூர் ரிசர்வ் வனத்தில் சுமார் 5,450 ஹெக்டேர் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன.
சமீப காலமாக காடுகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. காடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், காடுகளை நிர்வகிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. காடுகள் மேம்பாடு அடைந்துள்ளதால் சமீப காலமாய் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த காடுகளில், இந்திய காட்டெருமை, புள்ளிமான், சுட்டி மான், லாரிஸ் எனப்படும் தேவாங்கு, குள்ளநரி, கீரிப்பிள்ளை, கருப்பு முயல், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, உடும்பு , காட்டுக்கோழிகள், குரங்கு, மலைப்பாம்பு போன்றவை காணப்படுகின்றன.
2016-17 காலகட்டத்தில் நடத்தப்பட்ட வனவிலங்கு கணக்கெடுப்பில் கடவூர் ரிசர்வ் வனப்பகுதியில் 3,500 தேவாங்குகள் காணப்பட்டன. தற்போது சுமார் 5,000 ஆக அதிகரித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற சாத்தியமான இனப்பெருக்கம் எந்த காடுகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் வனப்பகுதிகளால் நிர்வகிக்கப்படும் கடவூர் மலைகளின் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு சரிவுகளில் உள்ள வனப்பகுதிகளில் தேவாங்குகள் காணப்படுகின்றன.
லோரிஸ் எனப்படும் இந்த தேவாங்குகள் ((Loris tardigradus) தங்களின் வாழ்க்கை முறையை ரகசியமாக வைத்துக்கொள்ளும் தன்மை உடையன. இரவு நேரங்களில் மட்டுமே இவைகளை காண முடியும். இது பொதுவாக ஒரு மரத்தின் கிளையிலிருந்து இன்னொரு மரத்திற்கு பயணிக்கிறது. ஆனால், சில நேரங்களில், உணவுக்காக தரை மட்டத்தில் உள்ள புதர்களுக்கும் வருகின்றன.
இது பகல் நேரங்களில் பசுமையான அடர்ந்த புதர்கள் அல்லது மரத்துளைகள் அல்லது விரிசல்களில் தூங்குகின்றன. அவைகள் இரையை தேடி இருள் சூழும் நேரத்தில் வெளியே வருகின்றன. அவைகள் லந்தானா பெர்ரி எனப்படும் காட்டில் வளரும் ஒருவகை பழங்களை அதிகம் விரும்பி உண்ணுகின்றன. பூச்சிகள், பல்லிகள், சிறிய பறவைகள், மரத் தவளைகள், மென்மையான இலைகள் மற்றும் மொட்டுகளையும் உண்ணுகின்றன.
அவைகள் பொதுவாக தனிமையாக இருப்பதையே விரும்புகின்றன. ஆனால் சில நேரங்களில் ஜோடிகளாகக் காணப்படும். இந்த விலங்குகளுக்கு சில மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுவதால், அவை பிடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அதிகமாகியுள்ளது. அதனால், அவை சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. வாழ்விடங்களை இழப்பது, நேரடி மின் கம்பிகளின் மின்கசிவு மற்றும் சாலை விபத்துகள் போன்றவை மூலமாகவும் இவைகள் குறைந்து வருகின்றன.
கரூர் மாவட்டத்தின் மாவட்ட வன அலுவலர் (DFO) சமீபத்தில் அழிந்து வரும் தேவாங்குகளை பாதுகாக்கவும் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் ஒரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், மென்மையான லோரிஸ் எனப்படும் தேவாங்குகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை பாதுகாப்பதற்காக இப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.
ஆனால், உண்மையில், ஒரு சரணாலயம் உருவாக்கப்பட்டால், அது நிறைய நடைமுறை சிக்கல்களை உருவாக்கலாம். சரணாலயம் அமைக்கப்பட்டவுடன், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (ESZ) அறிவிக்கும் கேள்வி எழலாம். கடவூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள 18 குக்கிராமங்களும் ESZ எல்லைக்குள் அமைந்துள்ளதால் அந்த கிராமங்கள் மோசமாக பாதிக்கப்படும் சூழலும் ஏற்படலாம்.
உள்ளூர் கிராம மக்கள் காட்டை பாதுகாப்பதிலும் காடுகளை நிர்வகிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். காரணம் அவர்கள் அந்த காடுகளில் இருந்து புளி, பனை மட்டைகள், தேன்,மூலிகைகள், சில உணவுக்கு பயன்படும் வனப்பொருட்களை அறுவடை செய்கிறார்கள். உள்ளூர்வாசிகளால் அந்த காடுகள் பாதுகாக்கப்பட்டதால் வனவிலங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது என்பதையும் மறுத்துவிட முடியாது.
சரணாலயம் அமைக்கப்பட்டால், கிராம மக்கள் காடுகளுக்குள் நுழைய தடை ஏற்படலாம். இதுபோன்ற நடவடிக்கைகளால் உள்ளூர்வாசிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். இப்பகுதியில் பெரும்பாலான கிராம மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்கு அழிந்து வரும் பட்டியலில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதனால் இந்த விலங்கினை பாதுகாப்பதற்காக மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பை வழங்கும், காட்டு வாழ்க்கை (பாதுகாப்பு) சட்டம், 1972 ன் அட்டவணை I இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தேவாங்கு பாதுகாப்பு மற்றும் அறிவியல் மேலாண்மைக்காக, மேலே குறிப்பிட்டுள்ள காரணிகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட வன அலுவலகம் (டிஎஃப்ஒ) இந்த மீட்பு திட்டத்தை செயல்படுத்த முன்மொழிந்துள்ளது. கடவூர் ரிசர்வ் வனத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள கிராம விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிரில் பூச்சிகள் மற்றும் சில தாவரங்களின் மென்மையான தளிர்களை உண்ணும் பழக்கத்தில் தேவாங்குகள் இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரவில் இரையைத் தேடி அவை மெதுவாக நகர்கின்றன. சில நேரங்களில், அவைகள் மிக மெதுவாக நகர்கின்றன. இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன. வாகன ஓட்டிகள் அவ்வாறு பாதுகாக்கப்படவேண்டிய இந்த உயிரினத்தை கண்டால் வாகனத்தை நிறுத்தி அவைகள் செல்ல இடம் தரவேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டுனர்கள் குறிப்பாக இரவு நேரங்களில், வாகனங்களை பார்த்து, கவனமாக ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விவசாயப் பயிர்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதால் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடவூர் படுகை முழுவதும் விவசாய நிலங்கள் உள்ள பகுதியாகும். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, இந்த மலைப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் வறண்ட நிலங்களாகவே உள்ளன. நீர் வசதி கொண்ட தாழ்வான பகுதிகள் ஈரநிலங்களுடன் வளமாக உள்ளன. படுகையின் மேல் பகுதியில் நிலங்களை வைத்திருப்பவர்கள் வறண்ட பயிர்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர். அதனால் பெரும்பாலானவர்கள் மழையை நம்பியே விவசாயம் செய்கின்றனர்.
அரிதான விலங்கான தேவாங்கை பாதுகாக்க டிஎஃப்ஒ முன்மொழிந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், முழு சுற்றுச்சூழல் அமைப்பும் மேம்பாடடையும். கூடுதலாக, மேம்பட்ட நீர் ஆதாரங்கள் மூலம் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறை விவசாய பயிர் சாகுபடி செய்ய முடியும். இதனால், விவசாயிகளின் பொருளாதார நிலையும் மேம்படும்.
சூழல் மேலாண்மை கமிட்டி (eco-tourism management committee) ஆதரவு இருந்தால் சூழல் சுற்றுலா அதிகரிக்கும். இதனால்,கடவூர் பகுதியில் சூழல் சுற்றுலா வளர்ச்சியடையும்.அதன்மூலம் உள்ளூர் மக்களும் பயனடைவார்கள். அழிந்து வரும் தேவாங்கை பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும், கடவூர் படுகை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு முன்மொழிவை விரைவில் அனுமதிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பம்.
கடவூர் பகுதி வனப்பகுதியில் வாழும் அரிதான விலங்கு தேவாங்குக்கு சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் கலெக்டர் பிரபுசங்கர் உறுதியளித்துள்ளார் என்பதும் இங்கு குறிபிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu