ராணிப்பேட்டையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி
ராணிப்பேட்டை நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.1.05 கோடியில் பூங்காக்கள் திறப்பு, சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.00 லட்சத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டடம், ரூ.13.00 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறந்து வைத்தல், நமக்கு நாமே திட்டம் 2023-24-இன் கீழ் ராஜேஸ்வரி தியேட்டா் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரையில் எல்இடி மின் விளக்குகள் அமைத்தல் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பேசியதாவது :- தமிழக முதல்வா் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கிட்டத்தட்ட 33 மாதங்களில் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கட்சி பேதமின்றி பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளைவிட நமது ராணிப்பேட்டை நகராட்சியில் இந்த 33 மாதங்களில் ஏராளமான வளா்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் நாட்டுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. ராணிப்பேட்டை நகரில் அமைந்துள்ள பிஞ்சி ஏரியை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் ராஜா - ராணி நினைவு மண்டபம் உலக தரத்தில் புனரமைக்கப்பட உள்ளது. மேலும், நகரில் சாலைகள், மேம்பாலங்கள், எல்இடி மின் விளக்குகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ராணிப்பேட்டை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியா் ச.வளா்மதி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், ஆணையா் விநாயகம், பொறியாளா் பரமுராசு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், துணைப் பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் சிவமணி, நகா்மன்ற உறுப்பினா் எஸ்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu