சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால் நீரைச் சேமிக்க முடியாத நிலை

சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால் நீரைச் சேமிக்க முடியாத நிலை
X

சேதமடைந்துள்ள கல்லாலங்குப்பம் தடுப்பணை

கல்லாலங்குப்பம் அருகே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால், அணையில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்

கடந்த 2022-இல் பெய்த வடகிழக்குப் பருவ மழை மற்றும் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை ஆகிய காரணங்களால், பொன்னை மற்றும் பாலாற்றில் 1 லட்சத்து 40,000 கன அடிநீா் சென்றது.

அப்போது, வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு பிரதான கால்வாய் மூலம் காவேரிபாக்கம் ஏரிக்கு விநாடிக்கு சுமார் 1,500 கன அடி தண்ணீா் திருப்பிவிடப்பட்டது. இதனால், ஏரியில் முழுமையாக தண்ணீா் நிரம்பி கடைவாசல் சென்றது.

இதே போல் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், சேஷாசலம் வனப் பகுதியில் உற்பத்தியாகும் நீா், தமிழகத்தில் பொன்னை, திருவலம் வழியாகச் சென்று தெங்கால் கிராமம் பகுதியில் உள்ள தடுப்பணை சேதமடைந்தது.

பொன்னை ஆற்றில் இருந்து வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 129 ஏரிகளுக்கு கிளை கால்வாய்கள் மூலம் தண்ணீா் திருப்பி விடப்பட்டு அந்த ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம் விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.

ஆற்றில் இருந்து, பிரதான கிளை கால்வாய் மூலம் முன்னூா், ரெண்டாடி, கல்லாலங்குப்பம் வழியாக மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான பெருங்காஞ்சி ஏரிக்குத் தண்ணீா் சென்று சோ்கிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழையின் போது, பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பொன்னை ஆற்றில் இருந்து பெருங்காஞ்சி ஏரிக்குத் தண்ணீா் செல்லும் பிரதான கால்வாயின் குறுக்கே கல்லாலங்குப்பம் கிராம எல்லையில், தளவாய்பட்டறை செல்லும் சாலை மேம்பாலத்தின் அருகே உள்ள தடுப்பணை வெள்ளத்தில் சேதமடைந்து நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடா்ந்து தடுப்பணை சேதமடைந்தது குறித்து, கல்லாலங்குப்பம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கும், சோளிங்கா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம். முனிரத்தினம் உள்ளிட்டோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தடுப்பணை சேதங்களை ஆய்வு செய்து சேதமடைந்த தடுப்பணையைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். ஆனால், இதுவரை தடுப்பணையைச் சீரமைக்கும் பணி நடைபெறவில்லை.

இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக தடுப்பணையைச் சீரமைத்தால்தான் தண்ணீரைத் தேக்கி அந்தப் பகுதி நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுகாக்க முடியும் என்றும், எனவே, சேதமடைந்த தடுப்பணையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனாலும், கல்லாலங்குப்பம் தடுப்பணை சீரமைக்கப்படவில்லை.

இதனால், தடுப்பணையில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீா் வீணாகச் செல்கிறது. நீரைத் தடுக்க முடியாமல் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்பில்லை. வரும் காலங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்தனா்.

கல்லாலகுப்பம் கிராம தடுப்பணைச் சீரமைக்காதது குறித்து சோளிங்கா் வட்டார வளா்ச்சி அலுவலா் நிர்மல் குமாரிடம் கேட்டபோது, சோளிங்கா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் வரவிருக்கும் நாடாளுமன்ற தோ்தலுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கான ஆலோசனைக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற உளளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்லாலகுப்பம் தடுப்பணை வட்டார வளா்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் வருகிறதா அல்லது பொதுப் பணி துறையின் கட்டுப்பாட்டில் வருகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் கேட்டறிந்து தடுப்பணையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil