கலவையருகே அரச மரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடத்திய கிராமமக்கள்

கலவையருகே அரச மரம் வேப்பமரத்திற்கு  திருமணம் நடத்திய கிராமமக்கள்
X

பன்னீர்தாங்கல் கிராமத்தில் அரச மரத்துடன் சேர்ந்து வளரும் வேப்பமரத்திற்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்திய கிராம மக்கள்

கலவையருகே அரச மரத்துடன் சேர்ந்து வளரும் வேப்பமரத்திற்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்திய கிராம மக்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த பன்னீர்தாங்கல் கிராமத்திலுள்ள பொதுமக்கள் அங்குள்ள கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் இணைந்து வளர்ந்து வரும் அரச,வேப்ப மரங்களுக்கு திருமண வைபோகத்தை நடத்தி வணங்கினர். அதில் பந்தகால் நட்டு, பந்தலிட்டு, மாவிலைத்தோரணங்களுடன் வாழைமரம் கட்டி, கோயில் முழுவதுமாக அலங்கரித்து இருமரங்களுக்கும் முகூர்த்த வேட்டி சேலையை உடுத்தி, மாலையணிவித்து வேதமந்திரங்கள் முழங்க வேப்பமரத்திற்கு தாலிகட்டி திருமணத்தை விமரிசையாக நடத்தி கொண்டாடினர்.

திருமணவிழாவில், குழந்தை வரம் கேட்டும், திருமணத் தடங்கல் நீங்கக்கோரியும் பலர் வேண்டிக்கொண்டனர்.

இயற்கையை வழிபட்டு வந்த நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு, இன்று உலகம் முழுவதுமே போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாக விளங்கி வருகிறது. அவற்றிற்கு சான்றாகவே உலக வெப்பமயமாதல், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நீக்க மரங்கள் வளர்ப்பதில் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது. அதில் அரச மரம் பெரும்பங்காற்றுகிறது என்றும் அதேபோல விஷக்கிருமிகளை அழிப்பதில் வேப்பமரம் பெரும்பங்கு வகித்து வருகிறது என்றும் இன்றைக்கு உள்ள உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

எனவே தான், நமது முன்னோர்கள் பூமியில் ஜீவராசிகளின் உயிராக உள்ள ஆக்ஸிஜனை பெருமளவிற்கு தந்து வரும் அரச மரத்தை சிவனாகவும் , வைரஸ் கிருமிகளை அழிக்க வல்ல வேப்ப மரத்தை சக்தியாகவும் பாவித்து வலம் வந்து வணங்கி வருகின்றனர். மேலும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள், மனஅழுத்தமாக உள்ளவர்கள், மரத்தைச்சுற்றி வந்து மரத்தின் கீழ் அமர்ந்து வர அனைத்தும் குணமாகும் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் இது போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!