முதுகுளத்தூர் அருகே மாமனாரை விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது

முதுகுளத்தூர் அருகே மாமனாரை விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது
X

கனிமொழி மற்றும் கொலை செய்யப்பட்ட முருகேசன்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மாமனாருக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி, வினோபராஜ், கோமதி என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபால் மற்றும் கோமதி ஆகிய இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

அவரது மகன் வினோபாராஜுக்கும் கனிமொழிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போதுவரை குழந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மாமனார் முருகேசன் பாலியல் ரீதியாக தொந்தரவுகொடுத்ததாக கடந்த ஜூலை 29ம் தேதி முருகேசனுக்கு கணிமொழி உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனயைடுத்து, உணவு அருந்திய முருகேசன் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அபிராமம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் அவர் வைத்த சாப்பாடு தட்டை கீழே கொட்டியபோது 15 கோழிகளுக்கு மேல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மருமகள் கனிமொழி ஜூலை 30 ம் தேதி இரவு மீண்டும் சாப்பாட்டில் விஷம் வைத்துள்ளார். ஆனால், சாப்பிடும்போது மருந்து வாடை வருவதாக அவரது மருமகன் முருகனிடம் முருகேசன் கூறியதாக தெரியவருகிறது.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது தந்தைக்கு குழம்பில் விஷம் வைத்த தகவல் அவரது மகன் வினோபாராஜ்க்கு தெரியவில்லை. தனது தந்தைக்கு வயிற்றுவலி என்ற அடிப்படையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த முருகேசனின் உடல் சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு கேளல் கிராமத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து முருகேசன் வீட்டைச்சுற்றி கோழிகள் இறந்து கிடந்தது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வினாபாராஜ் தந்தைக்கும் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக செய்தி பரவியது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வினோபாராஜ், மனைவி கனிமொழியிடம் கேட்டுள்ளார். அப்போது கனிமொழி நான் தான் குழம்பில் விஷம் வைத்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

இதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வினோபாராஜ் தனது தந்தைக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், முருகேசனுக்கு அவரது மருமகள் கனிமொழி உணவில் விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து, கனிமொழியிடம் நடத்திய விசாரணையில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால்தான் விஷம் வைத்து கொன்றேன் என பெண் கீழக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணனிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கனிமொழி மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீசார் நிலக்கோட்டை சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர். மாமனாருக்கு மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!