புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி ஜூலை மாதம் திறப்பு: அமைச்சர் தகவல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்(பைல் படம்)
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் ஜூலை 15இல் முடிந்ததும் முதல்வர் திறந்து வைப்பார் என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை முள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பல் மருத்துவக் கல்லூரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுக்கோட்டையில் ரூ. 63 கோடி மதிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது, 2021 அக்டோபரில் தொடங்கிய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு, அடுத்த மாதம் ஜூலை 15ஆம் தேதிக்குள் முடியும்.இம்மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி கோரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய பல் மருத்துவக் குழுமத்தில் விண்ணப்பித்தோம். அவர்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்த பிறகு, தற்போது 50 இடங்களில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க அனுமதி அளித்திருக்கின்றனர்.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் 1953ஆம் ஆண்டு ஒரு பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்ட நிலையில், அங்கு ஒரு பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் தொடங்கவுள்ளது மூன்றாவது கல்லூரி.
இங்கு 6 பேராசிரியர்கள், 11 இணைப் பேராசிரியர்கள், 30 உதவிப் பேராசிரியர்கள், 102 ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் ஆகிய பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன. பல் மருத்துவ கல்லூரிக்கும் மருத்துவமனைக்கும் தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜூலை 15ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிந்து, புதிய மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதற்கு முன்னால் தமிழ்நாடு முதல்வர் இந்தப் பல் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை, தருமபுரி, திருச்சி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகள் சரி செய்யப்பட்டு, மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிபெறப்பட்டுள்ளது.ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவிட்டு, சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் மழைநீர் வடிகால் கட்டமைப்பை கடந்த இரு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் சீரமைத்துள்ளார். எனவேதான் பெரிய அளவில் மழைநீர் தேங்கக் கூடிய இடங்களில் தற்போது எந்தப் பாதிப்பும் இல்லை. மழை பாதிப்புள்ள இடங்களில் தேவைப்பட்டால் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
மதுரை எய்ம்ஸைப் பொறுத்தவரை கடந்த 2 ஆண்டு காலமாகவே 50 மாணவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அதுபோல் இந்த ஆண்டுக்குரிய 50 மாணவர்களும் அங்கே படிப்பை மேற்கொள் வார்கள். அவர்களுக்குரிய வசதிகள் செய்து தரப்படும்.
15 மாதங்களில் 6.03 லட்சம் சதுரஅடியில் மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது வரலாற்றுச் சாதனை. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1.50 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 1.67 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உடல் தானத்திலும் முதலிடத்தில் நாம் தொடர்கிறோம். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை தூங்குவதாக தெரிவித்துள்ளார். தூங்குவது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார் அமைச்சர்மா. சுப்பிரமணியன்.
இந்த ஆய்வின்போது, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, மாநிலங்களவை உறுப்பினர் . அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலர் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu