மானுடம் பொதுவானது என்பதை உலகத் திரைப்படவிழா உணர்த்துகிறது: ஜி.ராமகிருஷ்ணன்

மானுடம் பொதுவானது என்பதை உலகத் திரைப்படவிழா உணர்த்துகிறது: ஜி.ராமகிருஷ்ணன்
X
நாடு, கடல், மொழி, இனம், எல்லைகளைக் கடந்து மானுடம் பொதுவானது என்பதை உலகத் திரைப்பட விழா நமக்கு உணர்த்துகிறது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத் திரைப்படவிழா புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கில் அக்.14 முதல் 18 வரை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

நாடு, கடல், மொழி, இனம், எல்லைகளைக் கடந்து மானுடம் பொதுவானது என்பதை உலகத் திரைப்பட விழா நமக்கு உணர்த்துகிறது. சமீபத்தில் தமிழில் முற்போக்குக் கருத்துக்களைத் தாங்கி வரும் படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத் திரைப்பட விழாவை நடத்துவதன் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் தனி முத்திரை பதித்துள்ளது. தமுஎகச-வின் இத்தகைய நகர்வு பண்பாட்டுத் தளத்தின் அழுத்தமான பதிவாகப் பார்க்கிறேன்.

மவுனமாக இருப்பது கூட ஒரு அரசியல்தான். அரசியல் இல்லாத ஒரு வாழ்வு இருக்க முடியாது என்கிற போது, நமக்குள்ளே தனிமனித அரசியலை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எளிய மனிதனின் வாழக்கை இங்கே இருக்கலாம் உலகின் எந்த நாட்டிலும் இருக்கலாம். ஆனால், அவர்களுடை வலி என்பது ஒன்றுதான். அந்த வலியை எதிர்த்து அவர்கள் செய்திருக்கக்கூடிய வழிமுறைகள் என்ன என்பதை திரைமொழியோடு சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்கு அமைந்துள்ளது.

திரைமொழி என்பது மிக முக்கியமானது. ஒரு கதையை நாம் படிக்கும் போது அது நமக்கு பிடித்த கதையாக மாறுகிறது. அதே கதை திரையில் புது மொழியாக மாறி முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்த திரைப்படங்கள் சொல்லும் பிரச்சினைகளை நீங்கள் புரிந்துகொண்டு விவாதிக்க வேண்டும். உரையாடலின் போது கிடைக்கும் சொற்கள் படைப்பாளிகளுக்கு கூடுதலாக ஒரு கவனம் பெறமுடியும்.

இங்கே திரையிடப்பட்ட படங்கள் கடல், நாடு, மொழி, இனம், எல்லைகளைக் கடந்து மனிதம், மாண்பு, அன்பு, அறம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மானுடம் பொதுவானது என்பதை உணர்த்துகிறது. காதல் திருமணம், மறுமணங்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் மிகப்பெரிய கலவரங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலை நாடுகளில் இவை மிக இயல்பாக நடப்பதை இப்படங்கள் நமக்கு உணர்த்துகிறது.

உத்தரப்பிரதேசம் முசாபர் நகரில் நடைபெற்ற மதக் கலவரத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஓராண்டுக்கு முன்பாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர். மோடி அரசை பணியவைத்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றனர்.

ஆனால், அதற்கப் பிறகு நடைபெற்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து வெறுப்பு அரசியல் வறுமையைத் தோற்கடித்து விட்டது என்பதை உ.பி. தேர்தல் நமக்கு உணர்த்துகிறது. எனவே, பண்பாட்டுத் தளத்தில் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற உலகத் திரைப்பட விழாக்கள் பயனளிக்கும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil