விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இத்தலமானது நாரதருக்கு பாவ விமோசனம் வழங்கிய தலமாகவும் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்த தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும். இதில் வைகாசி திருவிழாவானது 11 நாட்கள் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கியது அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது.
இதையடுத்து சுப்பிரமணியசுவாமி சமேத வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் சந்நிதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் முருகன் கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 2-ந் தேதி தேரோட்டம் அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், வெள்ளி மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜூன் 2-ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து 3-ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 4--ஆம் தேதி விடாயாற்றியுடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை தேவஸ்தானம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu