புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம்:மக்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறுமா
புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டைத் திறந்தவுடன் குறுகலான சாலையில் ஏறப்பட்ட நெரிசலில் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
அதிக போக்குவரத்தால் நெரிசலும் நீண்ட நேரக் காத்திருப்பும் ஏற்படும் புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளதைப் போல மேம்பாலமும், மேம்பாலத்துடன் ஒருங்கிணைந்த சுரங்கப் பாதை அமைக்க வேண்டுமென அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக திருவப்பூரில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. நகரின் விரிவாக்கம் காரணமாக இப்பகுதியில் ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேருந்து உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களும் இந்த ரயில்வேகேட்டைக் கடந்து மணப்பாறை, குடுமியான்மலை, விராலிமலை, பரம்பூர், இலுப்பூர், கொடும்பாளூர்,சித்தன்னவாசல், குமரமலை, காரையூர், அரசமலை, தேனிமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களுக்கும்,அதனைச்சார்ந்துள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேல்பட்ட கிராமங்களும் செல்லவேண்டும்.
மேலும், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் தங்கநாற்கரச் சாலைக்குச் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாக இந்தப் பாதை அமைந்துள்ளது. மேலும், இந்த வழிதத்தில் பல்வேறு தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. அக்கல்லூரிகளின் வாகனங்கள் அனைத்தும் இந்த வழியில்தான் மாணவர்களை கொண்டு சேர்க்கின்றனர். மேலும், கட்டடங்களுக்குத் தேவையான ஜல்லி, செங்கல், கடப்பாக்கல் போன்ற மூலப்பொருட்களைத் தயாரிக்கும் குவாரிகள், சூளைகளும் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ள காரணத்தால் அவற்றை ஏற்றிச் செல்வதற்காக உள்ளூர் லாரிகள் தவிர தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களைச் சார்ந்த லாரிகளையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேல்பட்ட லாரிகள் இந்த ரயில்வேகேட்டைக் கடந்து சென்று வருகின்றன. இது சாலைவழித்தடத்தின் அடர்த்தி நிலவரம்.
இதே போல, இந்த கேட் அமைந்துள்ள ரயில் தடத்தில் ராமேஸ்வரம்- வாரணாசி, ராமேஸ்வரம்- புவனேஸ்வர், சிலம்பு , பல்லவன் விரைவு ரயில், திருச்சி- மானாமதுரை, மன்னார்குடி - மானாமதுரை, சென்னை - ராமேஸ்வரம் உட்பட பல்வேறு ரயில்கள் தினந்தோறும் இயங்கி வருகின்றன்.மேலும் வாராந்திர ரயில்கள், சரக்கு ரெயில்களும் இந்ததடத்தில் இயங்குகின்றன. ஏறத்தாழ 10 முதல் 15 நடைகளும், ஒரு திசையிலும், எதிர் திசையில் ஏறத்தாழ 10 முதல் 15 நடைகள் என சாராசரியாக 20 முதல் 30 நடைகள் இயங்குகின்றன. இதன்காரணமாக ரயில்வே கேட் மூடப்படுகிறது.
அத்துடன் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இந்த ரயில்வே கேட் அமைந்திருப்பதால் மற்ற கிராசிங்குகளைவிட கூடுதல் நேரம் மூடப்படுகிறது. இதனால், வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உருவாகிறது. அதில், ஒரு ரயிலுக்கு 15 முதல் 25 நிமிடம் என கணக்கிட்டால் கூட சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 7 முதல் 8 மணி நேரம் வரை இந்த கேட் அடைக்கப்படுகிறது. இப்பாதை மிக குறுகலாக உள்ளதால் கேட் திறந்த உடன் போக்குவரத்து ஏற்படும் நெரிசலால் கூடுதல் தாமதமும் ஏற்படுகிறது.
இதனால் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அவசர கால ஊர்திகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், நோயாளிகள், இறுதி ஊர்வலங்கள், அவசர பணி நிமித்தமாக செல்பவர்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தினமும் பாதிக்கப்படும் நிலை தொடர்கதையாகிவிட்டது. பொதுமக்கள் அவசரமாக கடந்து செல்லும் போது ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதன் அருகே உள்ள ஆள் இல்லாத கேட் கடந்து சென்ற பலரும், வாகனங்களுடன் விபத்தைச் சந்தித்த நிகழ்வுகள் பல உண்டு.
தி்ருவப்பூர், நமனசமுத்திரம், பாலன்நகர் ஆகிய ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென ரயில்வே துறையிடம் கோரிக்கை அப்போதிருந்த மக்களவை உறுப்பினர் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2005-ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, மேம்பாலம் அமைப்பதற்குப் போதுமான வாகனப்போக்குவரத்தும், கேட் மூடினால் காத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.ஆனால், ஆய்வு நடத்தி 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது பெருகியுள்ள வாகனங்களின் எண்ணிக்கையை மீண்டும் ரயில்வேத்துறை ஆய்வு செய்தால் மேம்பாலம் அமைப்பதற்கான தகுதி கிடைக்கும் வாய்ப்புள்ளது எனக்கூறப்படுகிறது..
இதுகுறி்த்து நுகர்வோர் விழிப்புணர்வு சங்க மாவட்டத்தலைவர் எஸ்.பழனியப்பன் கூறியது: நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரவு பகலாக இந்த கேட் வழியாக பல்வேறு வாகனங்களில் கடந்து செல்லும் சூழ்நிலையில்,பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரின் சிரமங்களைத் தவிர்க்கும் பொது நோக்கில் இந்த ரெயில்வே கேட் பகுதியில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் மேம்பாலமும், மேம்பாலத்துடன் ஒருங்கிணைந்த சுரங்கப்பாதையும் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu