நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மக்களின் பங்களிப்பே கிராமசபைக்கூட்டத்தின் நோக்கம்

நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மக்களின் பங்களிப்பே கிராமசபைக்கூட்டத்தின் நோக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் கிராமத்தில் ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையிஸ் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம்

கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கும் திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, தாஞ்சூர் கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கலந்து கொண்டார்.

குடியரசு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டம் இன்று (26.01.2023) நடைபெற்றது. இதில் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, தாஞ்சூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு இன்றைய தினம் கலந்து கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது; அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடனும், பொது மக்களின் பங்களிப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச்-22 உலக தண்ணீர் தினம், மே-1 உழைப்பாளர் தினம், ஆகஸ்டு-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி, நவம்பர்-1 உள்ளாட்சி தினம் என ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம்.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பதப்படுத்தும் உபயோகத்திற்கான உப்பை உணவிற்காக விற்பனை செய்வதை தடை செய்தல், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தொழுநோய் ஒழிப்பு தினம், 13வது தேசிய வாக்காளர் தினம் கிராம சபைக் கூட்டங்களில் உறுதி மொழி வாசித்து தீர்மானம் இயற்றல், இதர பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் குடிநீர் வசதி, பேருந்து வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமங்களில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இது போன்ற கூட்டங்கள் வாயிலாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கும் திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வதுடன், இதன்மூலம் பயன் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) குருமணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச.இராம்கணேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and business intelligence