புதுக்கோட்டை அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை அருகே சிறப்பு கால்நடை சுகாதார  விழிப்புணர்வு முகாம்
X

கடியாபட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றியத் திற்கு 20 முகாம்கள் என்ற அளவில் நடைபெற்று வருகின்றது.

புதுக்கோட்டை அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராமச்சந்திரன் உத்தரவின் படி, கால் நடை பராமரிப்புத்துறை அறந்தாங்கி கோட்ட உதவி இயக்குனர் பாபு வழிகாட்டுதல்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் என்ற அளவில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி,புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ராயவரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கடியாபட்டி ஊராட்சி கடியாபட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.இம்முகாமில் அரிமளம் ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர்கள் வினோத்குமார், நிமலேசன், திலகவதி தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் கனகவள்ளி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உலகநாதன் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட கால்நடைகளை ஆய்வுசெய்து சிகிச்சை அளித்தனர்.

முகாமில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி, வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில்,கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, நோயுற்ற மாடுகளுக்கான சிகிச்சை, ஆண்மை நீக்கம், தற்காலிக மலட்டுத் தன்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சினை ஆய்வு ஆகிய சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. சினையுறா மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சையாக தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது.

இதனிடையே கன்றுகளுக்கான பேரணி நடைபெற்று சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கிடேரி, கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி விருது மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன சாகுபடி குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. இம்முகாம்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றியத்திற்கு 20 என்ற அளவில் நடைபெறுகிறது என்றும் இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி மற்றும் செயற்கைமுறை கருவூட்டல் பணிகள் மற்றும் சிறிய அளவிளான அறுவை சிகிச்சை பணிகள் ஆகியவை நடைபெறும் என்றும் பொதுமக்கள் இது போன்ற முகாம்களை நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்கள் கால்நடைகளை முகாம் நடைபெறும் இடத்திற்கு கொண்டுவந்து பயன்பெறுமாறு கால்நடை மருத்துவ அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

முகாமில் கடியாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டுவந்து பயனடைந்தனர். முடிவில் ஊராட்சி செயலர் குமரேசன் நன்றி கூறினார்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!