சாலை வசதி இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு : பொது மக்கள் புலம்பல்
12 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் பிற கிராம மக்கள் பெண் கொடுக்க மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் அரிமளத்திலிருந்து மணப்பட்டி செல்லும் சுமார் நான்கு கிலோ மீட்டர் சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சீர் அமைக்கப்படாமல் கிடக்கிறது. அந்த சாலை பள்ளமும் மேடுமாக பல்லாங்குழி போல காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சுள்ளாம்பட்டி, தேமக்கம்பட்டி, மணப்பட்டி, சாமந்தன்பட்டி, கோவில்வாசல், இசுகுப்பட்டி உள்ளிட்ட ஆறு கிராம மக்கள் இந்த சாலையைத் தான் பயன்படுத்த வேண்டும். மக்களின் அன்றாட தேவைகளுக்கு அரிமளம் பகுதிக்கு சென்று வர இந்த சாலைதான் முக்கிய தடம்.
குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்துள்ளதால் தங்கள் பகுதியில் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்க கூட யாரும் முன்வருவதில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு கொடுத்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அப்பகுதியைச் சேர்ந்த 6 கிராம மக்கள் அரிமளத்திலிருந்து தேனிப்பட்டி செல்லும் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்கள் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்த போராட்டம், பேரூராட்சி அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் பேச்சுவார்தை நடத்தினர். 'தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் சாலையை சீரமைக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு சாலையை சீரமைத்து தருகிறோம்.' என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu