புதுக்கோட்டையில் 3 லட்சத்து 141 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நச்சாந்துப்பட்டியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து பார்வையிட்டு பேசியதாவது:
தமிழகத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று பெருமளவு குறைந்துள்ளது. மேலும் கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று நச்சாந்துப்பட்டியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்து பார்வையிடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 2,62,230 நபர்களுக்கு முதல் தவணையும், 37,911 நபர்களுக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 3,00,141 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் முதல் தவணை தடுப்பூசி போட்ட அனைவரும் கட்டாயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. எவ்வித பக்க விளைவும் ஏற்படாது.
எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்களிடையே கோவிட் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிக அளவிலான பொது மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள செய்ய வேண்டும். மேலும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற கோவிட் தடுப்பு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், பொது சுகாதார துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஊராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu