பொன்னமராவதி, திருமயம் ஒன்றியங்கள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தொடர கோரிக்கை

பொன்னமராவதி, திருமயம் ஒன்றியங்கள் புதுக்கோட்டை தொடக்கக் கல்வி மாவட்டத்திலேயே தொடர வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, திருயம் ஒன்றியங்கள் புதுக்கோட்டை தொடக்கக் கல்வி மாவட்டத்திலேயே தொடர வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரண்டு மாவட்ட தொடக்கக் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ஏற்கெனவே, புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்த பொன்னமராவதி, திருமயம் ஆகிய ஒன்றியங்கள் தற்பொழுது அறந்தாங்கி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் சுமார் நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து கல்வி மாவட்ட அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏற்கெனவே இருந்தபடி புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திலேயே பொன்னமராவதி, திருமயம் ஒன்றியங்களை இணைக்க வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக பெண் ஆசிரியர்களே உள்ள நிலையில் இரண்டு கல்வி மாவட்ட அலுவலகங்களும் போக்குவரத்துடன், பாதுகாப்பாக நகரின் மையப் பகுதியிலேயே அமைய வேண்டும். குலக்கல்வியை புகுத்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைளை எந்த வடிவத்திலும் மாநில அரசு அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் த.ஜீவன்ராஜ் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ச.வின்செண்ட், பேச்சியம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் த.ரமேஷ், பழ.தேவேந்திரன், தோழமைச் சங்க நிர்வாகிகள் மா.குமரேசன், ஆ.மதலைமுத்து உள்ளிட்டோர் பேசினார். மாவட்டப் பொருளாளர் வே.கீதா நன்றி கூறினார். திரளான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu