கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா..

Konnaiyur Muthumariamman
X

Konnaiyur Muthumariamman

Konnaiyur Muthumariamman-பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது.

Konnaiyur Muthumariamman-புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

கொன்னையூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் முன்பு பெரும் காடாக இருந்தது, அப்போது இவ்வட்டாரத்தில் ஆலயம் ஏதும் இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் அருகேயுள்ள வேகுப்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீஏனமாரியம்மனை வழிபட்டு வந்தனர். அக்கோயிலுக்கு தரிசனம் செய்யவும், வியாபாரத்திற்காக பால் எடுத்து செல்கையில் தற்போது அம்பாள் வீற்றிருக்கும் இடத்தில் இருந்த கொன்னை மரத்தின் வேர் தடுக்கி பால் பூமியில் கொட்டும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் கிராமத்தினர் கொன்னை மரத்தடியில் அம்பாள் எழுந்தருளியுள்ளதாக அசரீரி வாக்கை கேட்டதாக கூறியவுடன் அனைவரும் ஒன்று கூடி கொன்னை மரத்தடியில் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அதன் காரணமாகவே இத்தலம் கொன்னையூர் என அழைப்படுவதாகவும் வரலாறு கூறுகிறது.

இவ்வாறு கொன்னையூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அப்பகுதி மக்களிடையே மிகவும் பயபக்தியுடன் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு வரும் ஆலயமாகத் திகழ்கிறது. மேலும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும்.

அதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாண வேடிக்கை யுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால்குடங்களுடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்று வார்கள்.

நிகழாண்டில் பங்குனிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை(19.3.2023) இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது . இவ்விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பால்குடம்,பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு சார்த்தி வழிபட்டனர்.

திங்கள்கிழமையிலிருந்து திருவிழா களை கட்டத் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இவ்விழாவையொட்டி கோயிலை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கண்காணிப்பு பணியிலும் கோயில் சுற்றுப்புறத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோயில்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் வந்து செல்லும் வகையில், பொன்னமராவதி, காரைக்குடி, புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனைகளிலிருந்து ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டது.பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டங்களில் காவடியுடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story