திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் ரகுபதி திறப்பு

திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் ரகுபதி திறப்பு
X

திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

தங்களுக்கான உணவுப் பொருட்களை தங்களது கிராமத்திலேயே பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது

மதியாணி மற்றும் நச்சாந்துப்பட்டியில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி மற்றும் திருமயம் ஒன்றியம், நச்சாந்துப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பகுதி நேர நியாயவிலைக் கடைகளை, சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் சட்ட அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டப் பணிகளை சிறப்பாக செயல் படுத்தி வருகிறார்கள். அதன்படி பொது மக்களுக்கு தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் பொதுமக்கள் வீண் அலைச்சலை தவிர்ப்பதுடன், தரமான உணவுப் பொருட்களை தங்களது இல்லங்களுக்கு அருகிலேயே பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுகிறது.மதியாணி முழுநேர தாய் அங்காடியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள மதியாணி பகுதி நேர அங்காடியானது 172 குடும்ப அட்டைகளுடன் பிரதி வாரம் புதன் மற்றும் சனிக்கிழமை மட்டும் இயங்கும் வகையில் மதியாணி கிராம மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோட்டூர் தாய் அங்காடியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள நச்சாந்துப்பட்டி அங்காடியானது இரண்டாவது பகுதிநேர அங்காடியாகும். இதில் 160 குடும்ப அட்டைகளுடன் பிரதி வாரம் புதன்கிழமை மட்டும் இயங்கும் வகையில் நச்சாந்துப்பட்டி கிராம மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறந்து வைப்பதன் மூலம் மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றம் உள்ள காலங்களிலும் பொது மக்கள் தங்களது வீட்டின் அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கான உணவுப் பொருட்களை தங்களது கிராமத்திலேயே பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். பின்னர், திருமயம் ஒன்றியம், நச்சாந்துப்பட்டியில், 26 நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களை, அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து.

துணைப் பதிவாளர்கள் சதீஸ்குமார், ஆறுமுக பெருமாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து, கூட்டுறவு சார்பதிவாளர் கோ.அன்னலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பழனிவேல், சிதம்பரம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!