புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற  வரும் முன் காப்போம் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

பொன்னமராவதியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், பொன்னமராவதி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் .மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (02.12.2023) குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகளை வழங்கினார்.

அமைச்சர் ரகுபதி கூறியதாவது:முத்தமிழறிஞர் கலைஞர் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டில் ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட திட்டமிடப் பட்டுள்ளது. தற்போது 29-வது மருத்துவ முகாம் பொன்னமராவதி வட்டாரம், பொன்னமராவதி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில், மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொதுமக்களுக்கு குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோய்கள் கண்டறியப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் அளித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிய பயனாளிகளை சேர்பதற்கான முகாம் பொன்னமராவதி வட்டாரம், பொன்னமராவதி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.

ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோனை முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதற்;காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்தின்கீழ் 3,37,735 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று நோயில்லா நல்வாழ்வு வாழ வேண்டும் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் தெரிவித்தார்.

இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (புதுக்கோட்டை) மரு.ராம்கணேஷ், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலர்.சு.ரவிசங்கர், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருள்மணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!