புதுக்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் கோயிலுக்குச்சென்ற பக்தர்கள் 5 பேர் பலி
புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரத்தில் நேரிட்ட விபத்தில் உருக்குலைந்த லாரி மற்றும் வேன்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நேரிட்ட சாலை விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கும், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வேனில் சென்ற பக்தர்களில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 4 பேர் உள்பட 19 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருமயம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு வேனில் ஐயப்ப பக்தர்கள் 4 ஆண்கள் உள்பட 13 பெண்கள் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டனர். இதைப் போல சென்னை அமைந்தக்கரை பகுதியிலிருந்து ஒரு வேனில் 15 ஆண்கள் மேல்மருவத்தூர் சென்று வழிபாடு செய்து விட்டு ராமேஸ்வரத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டையைக் கடந்து திருமயம் அருகேயுள்ள நமணசமுத்திரம் காவல் நிலையம் எதிரே இருந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த வாகனங்களை நிறுத்திவிட்டு தேனீர் அருந்த சிலர் இறங்கினர். கண்ணயர்ந்த பலர் வேனிலேயே இருந்தனர் இதைப்போல திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற ஒரு காரும் அங்கு நின்றிருந்தது. .
அப்பொழுது நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்திக்குச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக கடை முன்னே நின்ற வேன் மீது மோதியது. இதையடுத்து அந்த வேன் முன்னால் நின்றிருந்த மற்றொரு வேனையும் மோதித்தள்ளியது. அடுத்ததாக, இந்த வேன் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த காரின் பின்புறத்தை இடித்துத் தள்ளியது. சிமெண்ட் லாரி மோதிய வேகம் காரணமாக அடுத்தடுத்து நின்ற பக்தர்களின் வாகனங்கள் மற்றும் கார் உள்பட 3 வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில், ராமேஸ்வரம் சென்ற வேனில் இருந்த திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா பனஞ்சேரியைச் சேர்ந்த பா.ஜெகநாதன்(60), அதேபகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி சாந்தி(49), சபரிமலைக்குச்சென்ற திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் ஜெ.சுரேஷ்(34),சென்னை, அமைந்தக்கரை பகுதியைச் சேர்ந்த எஸ்.சக்தி(25) திருமுல்லைவாயில் ரா. கோகுலகிருஷ்ணன்(28) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் 4 பேரும் லேசான காயங்களுடன் 15 பேரும் திருமயம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து நேரிட்ட இடத்தை கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டார். இது குறித்து பொன்னமராவதி கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், விபத்துக்குக் காரணமான சிமெண்ட் லாரி ஓட்டுனர் திருவையாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(39) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu