புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்ட 3 நீதிமன்றங்கள்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) நீதிபதி டி.ராஜா, சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் சார்பு நீதிமன்றம்,பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கறம்பக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) நீதிபதி டி.ராஜா, சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில் இன்று (07.04.2023) திறந்து வைத்தார்.
விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) நீதிபதி டி. ராஜா பேசியதாவது: நீதித்துறை வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 நீதிமன்றங்கள் திறந்து வைத்திருப்பது, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். பொதுமக்களுக்கு விரைவான வகையில் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போது வைக்கப்பட்டுள்ள திருமயம் சார்பு நீதிமன்றத்திற்கு 882 வழக்குகளும், பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு 564 வழக்குகளும், கறம்பக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு 446 வழக்குகளும் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நவநாகரீக உலகத்திற்கு முன்னோடியாக இருந்து மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் தற்பொழுது நிலுவையில் இருந்து வருகின்றன. இதன்மூலம் உரிய நீதி கிடைப்பதற்கு 10 முதல் 15 வருடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்கு அனைத்து வழக்கறிஞர்களும் சுருக்கமாகவும், தெளிவாகவும், தங்களது வழக்குகளை கையாள வேண்டும். மேலும் ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 23 நீதிமன்றங்களுடன், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 3 நீதிமன்றகளும் என மொத்தம் 26 நீதிமன்றங்கள் மூலமாக வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே வழக்கறிஞர்கள் அனைவரும் இரத்தின சுருக்கமாக தங்களது கருத்துகளை எடுத்துரைக்க வழக்குகள் குறித்து தெளிவாகவும், அறிவாகவும் இருக்க வேண்டும். வழக்கறிஞர்கள் அனைவரும் தங்களது வழக்குகளில் வெற்றி பெறுவதற்கு, தங்களது கோபத்தை கைவிட வேண்டும். கோபத்தை குறைக்கும் பழக்கத்தை தங்களது இல்லங்களிலிருந்து அனைத்து வழக்கறிஞர்களும் தொடங்கிட வேண்டும் என மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) நீதிபதி திரு.டி.ராஜா தெரிவித்தார்.
இதில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தின் நீண்டநாள் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் திருமயம் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கறம்பக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) நீதிபதி திறந்து வைத்துள்ளார்கள்.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் தமிழகம் நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறையில், உயர்நீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பின் மூலம் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நீதிமன்றங்கள் கட்டமைப்புகள் மிகச் சிறப்பாக இருக்கும் மாநிலமாக தமிழகம் விளங்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் நீதித்துறை மற்றும் நீதி நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும் நீதியரசர்கள் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி வருகிறார்கள். மேலும் வரக்கூடிய நாட்களில் நீதித்துறைக்குத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தித்தரப்படும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.
விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.அப்துல் காதர், முதன்மை நீதிமன்ற நடுவர் டி.ஜெயக்குமாரி ஜெமி ரத்னா , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.டி.சின்னராஜு மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu