கொன்னையூர் மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா தொடக்கம்

கொன்னையூர் மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா தொடக்கம்
X

பைல் படம்

கொன்னையூர் மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா: பூச்சொரிதல் (மார்ச்19 ) விழாவுடன் தொடங்குகிறது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை பூச் சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது.

கொன்னையூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அப்பகுதி மக்களால் மிகவும் பய பக்தியுடன் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு வரும் ஆலயமாகத் திகழ்கிறது. மேலும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக் கோயிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும்.

அதில், கொன்னையூர் கோயிலைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாண வேடிக்கையுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால் குடங்களுடன் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

அதைத் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டி 15 நாள்கள் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் வழிபாடு நடைபெறும். 15 -ஆம் நாளன்று நடைபெறும் திரு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, இந்தக் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி ஆகிய ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் நாடு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா:

நிகழாண்டுக்கான பங்குனிப் பொங்கல் திரு விழாவின் தொடக்கமாக வரும் ஞாயிற்றுக்கிழமை(19.3.2023) பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. மறுநாள்(20.3.2023) திங்கள்கிழமை அக்னி காவடி எடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

திருவிழாவுக்கு காப்புக்கட்டுதல்:

இதைத்தொடர்ந்து வரும் 26.3.2023 – ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 15 நாள்கள் நடைபெறுகிறது. இதில், ஏப்ரல் 9, 10, 11 (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) ஆகிய 3 நாள்களும் பொங்கல் சிறப்பு பெருந் திருவிழா நடைபெறு கிறது. இதையடுத்து வருகிற 10.4. 2023 -(திங்கள்கிழமை) அன்று கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் / தக்கார் தி. அனிதா, செயல் அலுவலர் ம. ஜெயா மற்றும் பூஜகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பங்குனி பெருந் திருவிழாவுக்கான அழைப்பிதழை சட்ட அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் கவிதாராமு, புதுகை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று அறநிலையத் துறை அலுவலர்கள் வழங்கி விழாவுக்கு அழைப்பு விடுத்தனர். இக்கோயில் புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் சுமார் 37 கிமீ தொலைவில் உள்ளது. கோயில் நடை திறக்கும் நேரம்- காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. (மதியம் 1 முதல் 3 மணி வரை நடை சார்த்தப்படும்)

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா