கொன்னையூர் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: நாடு வருதல் வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நாடு வருதல் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்கோயில் தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்பகுதி மக்களால் மிகவும் பயபக்தியுடன் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு வரும் ஆலயமாகத் திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனித்திங்கள் முதல் ஞாயிற்றுக் கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும்.அதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாண வேடிக்கையுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால்குடங்களுடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.
நிகழாண்டுக்கான பங்குனிப் பொங்கல் திருவிழாவின் தொடக்கமாக வரும் ஞாயிற்றுக்கிழமை(19.3.2023) பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மறுநாள்(20.3.2023) திங்கள்கிழமை அக்னி காவடி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வரும் 26.3.2023 – ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 15 நாள்கள் நடைபெறுகிறது. இதில், ஏப்ரல் 9, 10, 11 (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) ஆகிய 3 நாள்களும் பொங்கல் சிறப்பு பெருந்திருவிழா நடைபெறு கிறது. இதையடுத்து கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது.
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திரு விழாவின் முக்கிய நிகழ்வான நாடு வருகை புரியும் விழா திங்கள்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் பொன்னமராவதி நாடு ஆர்எம்.ராஜா தலைமையிலும், செவலூர் நாடு ஜெயச்சந்திரன் தலைமையிலும், ஆலவயல் நாடு பெரி.அழகப்பன் தலைமையிலும், செம்பூதி நாடு ராமச்சந்திரன் தலைமையிலும் ஊர்வலமாக திரண்டு வந்து நாடு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடு வருகையில் பங்கேற்ற பக்தர்கள் சிலர் நேர்த்திக் கடனுக்காக உடல் முழுவதும் சேறு பூசியும், கையில் வேல் மற்றும் கம்பு ஏந்தியும், பல்வேறு வேடங்களில் தங்களை அலங்கரித்தும் வந்து கோயிலிலை வலம் வந்து நாடு செலுத்தினர்.உடலில் சேறு பூசி அம்மனை வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தாகம் தணிப்பதற்காக கொடையாளர்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் வழங்கினர். இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருமயம், புதுக்கோட்டை, பொன்னமராவதி உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் தி.அனிதா, செயல் அலுவலர் ம.ஜெயா ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu