பேருந்துகள் தமிழக மக்களின் சொத்து: போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

பேருந்துகள் தமிழக மக்களின் சொத்து: போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
X

புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதியில் புதிய போக்குவரத்து வழித்தடங்களில் பேருந்துகளை கொடியசைத்து இயக்கி வைத்த அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், எஸ்.ரகுபதி.

தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 12 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: தமிழ்நாட்டில் சென்ற அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை எடுபிடித் துறையாக இருந்தது, கடந்த திமுக ஆட்சியில் 22,000 அரசு பேருந்துகள் இருந்த நிலையில் , கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை 19 ஆயிரமாகக் குறைந்து விட்டது.

பேருந்துகள் தமிழக மக்களின் சொத்து. பெண்களுக்காக இலவச பேருந்துகள் விடுவதால், அரசுக்கு ரூ.1400 கோடி இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் நலனை காக்க கூடிய அரசாக இருப்பதால் இழப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சேவையை தமிழக அரசின் போக்குவரத்து துறை செய்து வருகின்றது.

எந்த ஒரு தகுதியும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்று அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கூட எப்படி வாங்கினார் என்று அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் யாரும் உயிருடன் இல்லை. தற்போது தன்மானம் மிக்க சுயமரியாதையுடன் இருக்கக்கூடிய தலைவராக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மட்டுமே இருக்கின்றார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நேர்மையான அதிகாரிகளுக்கும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பு கொடுத்து எந்தவித குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காதவர்களை அருகில் வைத்துக் கொண்டு, ஆட்சி செய்து வருகிறார் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வை. முத்துராஜா, எம்.சின்னதுரை மற்றும் போக்குவரத்து மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்