நெல் பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை
பைல் படம்
நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை தெவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளம் ஒன்றியப் பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற் பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்த ஆலோசனைகளை வேளாண்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அரிமளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள தகவல்: அரிமளம் வட்டாரத்தில் ஏம்பல், இரும்பநாடு, திருவாக்குடி கிராமங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ள பயிரில் குறிப்பாக சம்பா மசூரி இரகத்தில் குலை நோய் அறிகுறி தென்படுகிறது.
இந்த நோயை உரிய ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை கடைப் பிடித்து கட்டுப்படுத்தி சேதங்களை தவிர்க்கலாம்.குலை நோய் தாக்குதலின் அறி குறிகள்: இலையின் மேல் பகுதியில் அளவில் சிறிய பசுமை கலந்த நீல நிறப் புள்ளிகள் உருவாகும். பின்பு புள்ளிகள் பெரிதாகும் போது இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து நடுப்பகுதியில் அகலமாகவும்,முனைகள் கூராகவும் காணப்படும்.
இது பார்ப்பதற்கு நமது கண் வடிவத்தை ஒத்திருக்கும் இந்த கண் வடிவ புள்ளிகளின் ஓரங்கள் கரும் பழுப்பு நிறத்திலும்,உட்பகுதி இளம் பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும். தாக்குதல் அதிகமாகும் போது இலையில் காணப்படும் புள்ளிகள் ஒன்று சேர்வதால் இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்படும். குலை நோய் தாக்குதலால் 30 முதல் 60 சதவீதம் விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலையின் காரணமாக, இந்தப் புள்ளிகள் இலைகள், பால் பருவம் மற்றும் முற்றும் நிலையில் உள்ள கதிர்களின் கழுத்து பகுதிகளில் புள்ளிகள் ஏற்பட்டு கதிர் ஒடிந்து விழும். இந்தநோய் காற்று, விதை மற்றும் நோயுற்ற வைக்கோல் மூலம் பரவும் தன்மை கொண்டது. இரவு நேரத்தில் 20 டிகிரிக்கு குறைவான வெப்பநிலை, அதிக நேரப்பனிப்பொழிவு 85 முதல் 90 சதவீதம் ஆகிய காரணிகள் இந்த நோய் பரவ காரணமாக உள்ளன.
இந்நோயை கட்டுப்படுத்த முதலில் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் டிகே.ம்-13,ஆடுதுறை 54 போன்ற குலை நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட நெல் இரகங்களை பயிர் செய்ய வேண்டும். சூடோமோனஸ் புளோரோசனிஸ் ஏக்கருக்கு 1 கிலோ வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தாக்குதல் அறி குறி அதிகமாகும் போது ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 120 கிராம் அல்லது கிட்டாசின்-400 மிலி அல்லது புரோகுளோராஸ் 23.5%+ டிரைசைக்ளோசோல் 20% இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu