புதுக்கோட்டையில் நாளை தொடங்கி 5 நாள்கள் நடக்கும் உலகத் திரைப்படவிழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத் திரைப்படவிழா (அக்.14) முதல் ௧௮ வரை புதுக்கோட்டை வெஸ்ட் திரையங்கில் நடைபெறுகிறது.
திரைப்பட விழா (Film festival) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளில் அல்லது திரையிடும் வசதியுள்ள சிறப்பு அரங்குகளில் குறிப்பிட்ட சில திரைப்படங்களை திரையிட்டு விவாதிப்பது, விளக்குவது, மற்றும் தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவது போன்ற பல நிகழ்வுகள் ஒருங்கே நிகழும் ஒரு கலை விழாவாகும்.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வியாழக்கிழமை புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இதுவரை 6 உலகத் திரைப்பட விழாக்கள் நடைபெற்றுள்ளது. சென்னை, பட்டுக்கோட்டை, கம்பம், திருப்பூர், திருவண்ணாமலையைத் தொடர்ந்து 7-ஆவது உலகத் திரைப்பட விழா புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. பெருநகரங்களில் நடைபெறும் விழாக்களை விஞ்சுகிற அளவிற்கு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையின் பரம்பரியமிக்க திரையரங்கங்களில் ஒன்றாகிய (முற்றிலும் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட) வெஸ்ட் திரையரங்கில் 7-ஆவது உலகத் திரைப்பட விழா அக்டோபர் 14 முதல் 18 வரை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வரவேற்புக்குழு சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.
அமைச்சர்கள், திரைஆளுமைகள், எழுத்தாளர்கள் பங்கேற்பு: உலகத்திரைப்பட விழாவின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 5 நாட்களும் பிரான்ஸ், ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், கொலம்பியா, போஸ்னியா, ரஷ்யா, துருக்கி, ஜப்பான் உள்பட 11 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த உலகத் திரைப்பட விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்பட ஆளுமையுடன் ஒரு எழுத்தாளர் சந்தித்து திரைப்படங்கள் குறித்து உரையாடல் நிகழ்த்த உள்ளனர். இதுவரை நடைபெற்ற உலகத் திரைப்பட விழாக்களில் இருந்து, இந்த விழா திரைப்படங்கள் குறித்த பார்வையை ரசிகர்கள், பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் நிச்சயம் அமையும்.
திரைப்படங்கள் குறித்த பல்வேறு கோணங்களில் விசாலமான பார்வையை இந்தத் திரைப்பட விழா ஏற்படுத்தும். திரை ஆர்வலர்களிடம் உலக சினிமா குறித்த புரிதலை கொண்டுசெல்லவும், புதிதாக இளைஞர்கள் இத்துறையில் நுழைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் இந்தத் திரைப்பட விழாவை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம் என்றார் ஆதவன் தீட்சண்யா.
பேட்டியின் போது, மாநில திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன், வரவேற்புக்குழுத் தலைவர் கிருஷ்ண வரதராஜன், தமுஎகச மாநில துணைத்தலைவர்கள் நா.முத்துநிலவன், ஆர்.நீலா, மாவட்டத்தலைவர் ராசி.பன்னீர் செல்வன், செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.தனிக்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu