உலகில் எந்த உறவு கைவிட்டாலும்கைவிடாத உறவு புத்தகம்தான்: குன்றக்குடி அடிகளார்

உலகில் எந்த உறவு கைவிட்டாலும்கைவிடாத உறவு புத்தகம்தான்: குன்றக்குடி அடிகளார்
X

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பேசிய தவத்திரு குன்றக்குடி அடிகளார்

சரஸ்வதி பூஜை அன்று புத்தகத்தை மூடி வைத்து வழிபடுகின்றனர். அந்த நாளில் மாணவர்கள் புதிய புத்தகங்களை வாங்க வேண்டும்

உலகில் எந்த உறவு கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகம்தான் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: தீபாவளி வந்தால் புத்தாடைகள் வாங்குகின்றனர். பொங்கல் வந்தால் புதுப்பானையில் பொங்கலிடுகின்றனர். சரஸ்வதி பூஜை அன்று புத்தகத்தை மூடி வைத்து வழிபடுகின்றனர். அந்த நாளில் மாணவர்கள் புதிய புத்தகங்களை வாங்க வேண்டும்.நண்பர்கள் கைவிட்டாலும் உறவுகள் கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகங்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

ஒரு காலத்தில் ஆன்மீக வழியில் அறிவுத்திறனையும் மக்களை வழி காட்டியதும் அகம் புறமும் நம்மை செதுக்கியதும் தமிழ் மொழிதான். ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட நமது மொழி இன்று செம்மொழி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது.

அரண்மனையில் உலா வந்த தமிழ், மன்னர்களால் போற்றப்பட்ட தமிழ், அதியமான் தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை அவ்வைக்கு அளித்து அழியும் தமிழ் மொழியை காப்பாற்ற சொன்ன சிறப்பு பெற்றது தமிழ்.இருபதாம் நூற்றாண்டில் நாம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் உறங்கி கிடந்த மக்கள் மக்களை தட்டி எழுப்பி நாட்டு விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி. நாட்டு விடுதலைக்காக தமிழில் உள்ள அத்தனை எழுத்துகளையும் ஆயுத எழுத்துகளாக மாற்றியவன் பாரதி. அவன் வழியில் வந்த பாரதிதாசனும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தார்.

அறியாமையின் ஆணிவேர் கல்லாமை. கற்றவர் துன்பம் நீக்கும் வழி தமிழ்தான். ஒரு காலத்தில் மன்னர்களால் ஆலயங்களில், நாட்டு விடுதலையில், கடைக் கோடி மக்களின் பந்தியில் பரிமாறப்பட்டது தமிழ்தான். எந்த சமயத்திலும் சேராத எந்த சாயமும் இல்லாத திருக்குறள் நமக்கு கிடைத்தது.சாதாரண கரம்சந்த் காந்தியை அகிம்சாவாதியாக மாற்றியவர்கள் தமிழர்கள். அவர் தென் ஆப்பிரிக்கா இருந்த போது, இந்திய திருமண சட்டத்திற்காக போராடி சிறை சென்ற 17 வயது பெண் வள்ளியம்மையை காந்தி சந்தித்தார்.

அப்போது, சிறைக்கு சென்றதால் வருத்தம் இல்லையா என்று கேட்டபோது, இன்னொரு முறை சிறை செல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்றாராம் வள்ளியம்மை.அவரது மரணத்திற்குப் பிறகு தன்னை அகிம்சாவாதியாக மாற்றியது யார் என்றால் அது வள்ளியம்மை என்ற தமிழச்சிதான். அவரால்தான் திருக்குறளையும் தமிழையும் கற்றுக் கொள்ள நினைத்தேன் ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றார் காந்தி.

உலகத்தில் நிறைய இருக்கின்றன சந்தேகங்கள் இருக்கின்றன. செல்போன்கள் சிணுங்குகின்றன இணையதளங்கள் இயங்குகின்றன. ஆனால் சந்தேகங்கள் தீரவில்லை. இதற்கு தீர்வு கற்றல் தான். விலங்கை மனிதனாக மாற்றியது கற்றல். சிந்திக்க செயல்பட வைத்தது கற்றல்.படித்தும் படிக்காதவன் போல் நடந்து கொள்வது, தெரிந்தும் தெரியாதவர்கள் போல் நடந்து கொள்வது, அறிந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொள்வது முட்டாள்தனம். உலகத்தில் அறிவை வளர்க்கும் இருளை போக்கும், நேற்றைய துன்பத்தை மாற்றக்கூடியது கற்றல் தான்.நமது கல்வி மருத்துவரை உருவாக்குகிறது, பொறியாளர் களை உருவாக்குகிறது, அறிவாளிகளை உருவாக்குகிறது. ஆனால் மனிதர்களை உருவாக்கவில்லை.

அன்பின் பாதையை அறிவுப்பாதையில் பயணிக்க செய்வது புத்தகங்கள்தான். அறிவும் அன்பும் இணைந்து செயல்பட்டால் நாடு வளர்ச்சி பெறும். புத்தகங்களை நாம் புரட்ட மறுப்பதால் புத்தகங்கள் உலகத்தை புரட்டிப் போட்டவை என்பதை மறுக்க முடியாது.அறிவு வளர்க்க பயன்படுவது எல்லா விஷயங்களிலும் திறமை வளர்த்துக் கொள்வது அறிவின் வாசலை திறப்பது அன்பின் வாசலை திறப்பது புத்தகங்கள் தான் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். இதையடுத்து திரைப்பட நடிகை ரோகிணி பேசினார்.

புத்தககத்திருவிழாவின் இரண்டாம் நிகழ்வுக்கு காமராஜ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார்.புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் ம. வீரமுத்து வரவேற்றார்.சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன், நாகை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி. மாமலர் மாரிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ். மூர்த்தி, செந்தாமரை பாலு, நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் க. நைனாமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிலை முதல்வர் பெ. நடராஜன், பேராசிரியர் சி. அய்யாவு, புத்தகத்திருவிழாக்குழு நிர்வாகிகள் கவிஞர் ஜீவி, அசோகன், உணவக உரிமையாளர்கள் சரவணபவன் ஆதித்தன், அடிசில் சுருளிமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாக்குழு நிர்வாகி பிச்சைமுத்து நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்