புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: இன்று (ஜூலை29) தொடங்குகிறது
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா அரங்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா இன்று (ஜூலை.29) புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் எழுச்சியுடன் தொடங்குகிறது.
புதுக்கோட்டை மாவட்ட நிருவாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை. 29 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடத்துகிறது.
தொடக்கவிழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு:இன்று (ஜூலை.29) காலை 9.00 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் கலந்துகொண்டு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். முதல் விற்பனையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். விழாவில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிதிகள், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் உரையாற்றுகின்றனர்.
ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் பங்கேற்பு: மாலையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்புரை யாற்றுகிறார். எழுத்தாளர் நாறும்பூநாதன் கருத்துரை வழங்குகிறார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர் கவுரவிப்பு உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெறுகின்றன.
ஆட்சியர் ஆய்வு: புத்தகத் திருவிழா அரங்குகள் அமைப்பு மற்றும் விழா ஏற்பாடுகளுக்கான பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியருடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) இரா.தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் எஸ்.கருணாகரன் மற்றும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். புத்தகத் திருவிழா நடைபெறும் புதுக்கோட்டை நகர்மன்ற வளாகம் வியாழக்கிழமை மாலை வேளையிலேயே களைகட்டத் தொடங்கிவிட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu