அரிமளம் பேரூராட்சிப் பகுதியில் ரூ.1.22 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிப் பகுதிகளில், ஆழ்குழாய் கிணறுடன் கூடிய மின் விசை பம்ப், தார் சாலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை,சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி (21.07.2022) திறந்து வைத்தார்.
பின்னர் சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்வசதி, சாலைவசதி, மின்விளக்கு வசதி மற்றும் கழிவறை வசதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிப் பகுதிகளில், ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய மின் விசை பம்ப் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டு பொதுமக்களின் குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை - ஏம்பல் சாலையிலிருந்து சுள்ளாம்பட்டி வரையில் நபார்டு திட்டத்தின்கீழ், 1800 மீட்டர் நீளமுள்ள தார் சாலை ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் மூலம் இப்பகுதியை சார்ந்த மாணவ, மாணவிகள் எளிதாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரவும், விவசாய பெருங்குடி மக்கள் தங்களது விளைப் பொருட்களை பிற பகுதிகளுக்கு எடுத்து செல்ல பயனுள்ள வகையில் அமையும்.
மேலும் அரிமளம் பகுதியில் பேருந்துநிலையம், வாரசந்தை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தவுள்ளார்கள். அதற்கு மக்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு தேவையான இடங்களை அரசிற்கு ஒப்படைப்பதன் மூலம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார் அமைச்சர் ரகுபதி.
இதனைத் தொடர்ந்து, அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு, பரிசு தொகைகளை வழங்கி, பள்ளிக்கு தேவையான கலையரங்கம், மிதிவண்டி நிழற்குடை உள்ளிட்டவைகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றித் தரப்படும் என்றார் அமைச்சர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, அரிமளம் பேரூராட்சித் தலைவர் மாரிக்கண்ணு முத்துக்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், செயல் அலுவலர் சரவணன், உதவிப் பொறியாளர் செல்லமுத்து, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் இப்ராகிம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu