உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு  விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு ‘ஊமைஒலி” விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்

மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி மையத்தில் 4,562 தொடர் சிகிச்சை பெறுகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு ' ஊமை ஒலி " விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு புதுக்கோட்டை சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2022 நிகழ்வு, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (01.12.2022) நடைபெற்றது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர்-1 அன்று 'உலக எய்ட்ஸ் தினம்" அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சார்பில் 'உலக எய்ட்ஸ் தினம்-2022" இன்று அனுசரிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஏ.ஆர்.டி மையத்தில் 4,562 நபர்கள் (ஆண்கள்-2450, பெண்கள்-1977, திருநங்கைகள்-6 மற்றும் குழந்தைகள்-129) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2746 நபர்கள் (ஆண்கள் - 1291, பெண்கள் - 1359, திருநங்கைகள் - 1 மற்றும் குழந்தைகள்-95) தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 2020 ஆண்டின் கணக்கெடுப்பின் படி, எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் இந்தியாவில் 0.24 சதவிகிதமும், தமிழ்நாட்டில் 0.18 சதவிகிதமும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் 0.17 சதவிகிதமாக கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 617 நபர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 2,189 நபர்கள் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். முதியோர் உதவித் தொகை 161 நபர்களுக்கும், விதவைகள் உதவித்தொகை 97 நபர்களுக்கும், பசுமை வீடுகள் 17 நபர்களுக்கும், தாட்கோ மூலம் கடனுதவி 9 நபர்களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா 12 நபர்களுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 22 மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட தொற்று உள்ள குழந்தைகளின் கல்விக்காக ரூ.3,45,000 -ஐ 128 குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.

எனவே உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் எச்.ஐ.வி - எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வினை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எச்.ஐ.வி - எய்ட்ஸ் பற்றிய திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எச்.ஐ.வி உடன் வாழ்வோரை மதிக்கவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்கவும், மருத்துவ வசதிகளை பெறவும் நாம் உறுதுணையாக விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ச.ராம் கணேஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் மாவட்ட திட்ட மேலாளர் (பொ) மரு.கே.இளையராஜா, திட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார், ஆலோசகர்கள் செந்தில்குமார், இளம்விடுதி, குறும்பட இயக்குநர் செல்வகாந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!