திரைப்படங்கள் ஆரோக்கியமான சிந்தனை களைத் தூண்ட வேண்டும்: உ. வாசுகி
புதுக்கோட்டையில் திரைப்பட விழாவை தொடக்கி வைத்த உ. வாசுகி
திரைப்படங்கள் ஆரோக்கியமான சிந்தனைகளைத் தூண்ட வேண்டும் என்றார் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி.
இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து உலக திரைப்பட விழாவை ஜூன் 10, 11 தேதிகளில் புதுக்கோட்டையில் நடத்துகிறது.
திரைப்பட விழாவை தொடங்கி வைத்து உ.வாசுகி பேசியது: 1895-ஆம் ஆண்டு லூமியர் சகோதர்கள் பாரிஸ் நகரில் முதன்முதலாக ஓடும் படத்தை வெளியிட்டனர். தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் மிகப்பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன.
பிரதான நீரோட்ட திரைப்படங்கள் பல எதார்த்தம் என்ற பெயரில் பிற்போக்குத்தனமான விசயங்களை முலாம்பூசி மீண்டும் மீண்டும் மக்களின் மூளைக்குள் திணித்துக் கொண்டிருக்கின்றன. பெண்களைப் பற்றிய தவறான சித்தரிப்பு, தியாகத்தில் மெழுகுவர்த்தியாக போகப்பொருளாக சித்தரிப்பது, பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளியையை திருமணம் செய்ய வைப்பது, இருதார மணத்தை நியாயப்படுத்துவது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டுவது.
கொடுமை செய்யும் மிராசுதார்களுக்கு தலித் மக்கள் விசுவாசிகளாக இருப்பதை சிறந்த குணநலனாக சித்தரிப்பது, ஜனநாயக நீரோட்டத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வந்துவிட்ட பிறகும் ‘நாட்டாமை’ போன்ற படங்களை எடுத்து ஜனநாயக மாண்புகளை பின்னுக்குத் தள்ளுவது என தமிழ்சினிமா பல்வேறு வகையாக பிற்போக்கத்தனமான படங்களைத் தந்துள்ளது. அதே நேரத்தில் பல தரமான படங்களையும் தமிழ் சினிமா தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
பொதுவாக திரைப்படங்கள் மக்களின் மனநிலையை கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜெர்மனியில் யூதர்கள் கொல்லப்பட்டபோது பல படங்களில் அதை நியாயப்படுத்தி மக்களின் மனநிலை கட்டமைக்கப்பட்ட பிறகுதான் அத்தகைய கொடூரமான சம்பவங்கள் நடத்தப்பட்டன.
தற்பொழுது உள்ள ஒன்றிய அரசாங்கம் தங்களின் தவறுகளை நியாயப்படுத்த ‘காஷ்மீர் பைல்ஸ்’ மாதிரியான படங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இடதுசாரி மாடலை முன்னிருத்தும் கேரள அரசை அவதூறு செய்யும் விதமாக ‘கேரள ஸ்டோரி’ படத்தை வெளியிடுகின்றனர்.
இத்தகைய திட்டமிட்ட சதிச் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும். பொதுவாக படங்களை விமர்சனக் கண்ணோட்டத் தோடு பார்த்துப்பழக வேண்டும். திரைப்படங்கள் ஆரோக்கியமான விவாதங்களையும் சிந்தனைகளையும் தூண்ட வேண்டும். தவறாக மூளைச்சலவை செய்யக்கூடாது.
இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற உலகத் திரைப்பட விழாக்களை நடத்திவருவது மிகுந்த பாராட்டுக்கு உரியது.நாம் தேடினாலும் கிடைக்காத உலகலாவிய பல தரமான படங்கள் தம்மை தேடி வந்திருக்கிறது. நல்ல படங்கள் நமது பல்வேறு கேள்விகளுக்கு விடைகளைத் தேடித்தரும். சோர்வுற்று இருக்கும் நேரங்களில் புத்துணர்ச்சி அளிக்கும்.சாத்தியமானதல்ல என்று நாம் ஒதுக்கிய விசயங்களை சாத்தியப்படுத்தும். இந்தத் திரைப்பட விழாவை மாணவர்களும், இளைஞர்களும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் உ. வாசுகி.
தொடக்க விழாவுக்கு மாணவர் சங்க மாவட்டத தலைவர் ஏ.சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். தமுஎகச திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் திரைப்பட விழாவின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.திரைப்படங்கள் குறித்து திரை துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் பேசினார்.
வாலிபர் சங்க மாநிலத் தலைவர் கார்த்திக், மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தமுஎகச நிர்வாகிகள் ஜீவி, ராசி.பன்னீர்செல்வன், எம்.ஸ்டாலின் சரவணன், கி.ஜெயபாலன், மு.கீதா, புதுகை பிலிம் சொசைட்டி தலைவர் எஸ்.இளங்கோ, திரைப்படப் பாடலாசிரியர் இரா.தனிக்கொடி, புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.முன்னதாக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் வரவேற்றார். மாணவர் சங்க நகரத் தலைவர் எம்.மகாலெட்சுமி நன்றி கூறினார். ஏ.பாலாஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu