புதுக்கோட்டையில் மே தினக் கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் மே தினக் கொண்டாட்டம்
X

புதுக்கோட்டையில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில்  நடைபெற்ற பேரணி

புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி, பொதுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, தெற்கு 4ஆம் வீதி, அண்ணாசிலை வழியாக சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.

இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் உ. அரசப்பன், சிஐடியு மாவட்டத் தலைவர் க. முகமதலிஜின்னா ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி. பழனிசாமி, மாவட்டச் செயலர் த. செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன், தொழிற்சங்க மாவட்டச் செயலர்கள் அ. சிறீதர், ப. ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் கொடி ஏற்றினார். சந்தைப்பேட்டை ஆட்டோ நிலையத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் சிஐடியு கொடியேற்றினார்.

அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் மு. வைத்திலிங்கம் தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி, புதிய நிர்வாகிகள் தேர்வு, பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வுபெற்றோருக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கேஎன்கே. ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளைச் செயலர் டி. மதியழகன், அமைப்புச் செயலர் ஜி. வேணுகோபால், சிறப்புத் தலைவர் ஜி. தங்கவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர். மாநில செயல் தலைவர் ஆர். அன்பு நடராஜன் கொடியேற்றி வைத்துப் பேசினார்.

அறந்தாங்கியில்... அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் சிஐடியு கொடியேற்றினார்.

அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மனிதநேய ஜனநாயகத் தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டோ சங்கத் தலைவர் முகமது ராவுத்தர் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் முபாரக்அலி கொடியேற்றி வைத்தார். துணைச் செயலர் செய்யதுஅபுதாஹிர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி சுப்பிரமணியபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமரசிம்மேந்திரபுரம், எரிச்சி, மேற்பனைக்காடு, திருநாளூர், பிடாரிக்காடு, மறமடக்கி, நாகுடி, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும் கொடியேற்றி வைக்கப்பட்டது. இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலர் ஏ. ராஜேந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் கே. தண்டாயுதபாணி உள்ளிட்டோரும் கொடியேற்றினர்.

Tags

Next Story