உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் நகராட்சி பூங்கா அருகில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் - 2023 முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இன்று (01.12.2023) கையெழுத்திட்டு தொடக்கி வைத்து, மனித சங்கிலியில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஆட்டோக் களில் ஒட்டி உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியினை அலுவலர்கள், பணியாளர்களுடன் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர்-1 அன்று ‘உலக எய்ட்ஸ் தினம்” அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சார்பில் ‘உலக எய்ட்ஸ் தினம்-2023” இன்று அனுசரிக்கப்பட்டது.
இதில் மனித சங்கிலியானது, புதுக்கோட்டை நகராட்சி பூங்கா தொடங்கி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்பவர்கள், கல்லூரி மாணவஃமாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் உட்பட சுமார் 300 நபர்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி நடைபெற்றது. மேலும் எச்.ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஏ.ஆர்.டி மையத்தில் 4,738 நபர்கள் (ஆண்கள்-2,554, பெண்கள்-2,045, திருநங்கைகள்-6 மற்றும் குழந்தைகள்-133) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,900 நபர்கள் (ஆண்கள்-1,366, பெண்கள்-1,434, திருநங்கைகள்-1 மற்றும் குழந்தைகள்-99) தொடர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 2020 -ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் இந்தியாவில் 0.24 சதவிகிதமும், தமிழ்நாட்டில் 0.18 சதவிகிதமும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் 0.17 சதவிகிதமாக கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 617 நபர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 2,189 நபர்கள் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். முதியோர் உதவித்தொகை 161 நபர்களுக்கும், விதவைகள் உதவித்தொகை 97 நபர்களுக்கும், பசுமை வீடுகள் 17 நபர்களுக்கும், தாட்கோ மூலம் கடனுதவி 9 நபர்களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா 12 நபர்களுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 22 மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட தொற்று உள்ள குழந்தைகளின் கல்விக்காக 128 குழந்தைகளுக்கு ரூ.3,84,000- வழங்கி வருகிறது.
எனவே, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் எச்ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எச்ஐ.வி-எய்ட்ஸ் பற்றிய திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எச்.ஐ.வி உடன் வாழ்வோரை மதிக்கவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்கவும், மருத்துவ வசதிகளை பெறவும் நாம் உறுதுணையாக விளங்க வேண்டும்.
மேலும், உலக எய்ட்ஸ் தினம்-2023ன் மைய கருத்து “சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி-எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலினை முன்னெடுப்போம்; என்பதாகும். இந்த மையக்கருத்தை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து சமப்படுத்தும் பாங்கினையும் மற்றும் எச்.ஐ.வி-எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதி செய்யும் பொருட்டு நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். மேலும், மேற்கண்ட இலட்சியத்தை அடைய அனைவரும் எச்ஐ.வி பரிசோதனை செய்ய தன்னார்வமாக முன் வருவோம். எச்ஐ.வி-எய்ட்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் எச்ஐ.வி -உடன் வாழ்வோரின் வாழ்க்கை தரம் உயரவும், வாழ்நாளை நீட்டிக்கவும் பாடுபடுவோம் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், இணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.எஸ்.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் மாவட்ட திட்ட மேலாளர் (பொ) மரு.கே.இளையராஜா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (அறந்தாங்கி) மரு.எஸ்.நமச்சிவாயம், மரு.மு.சிவகாமி (தொழுநோய்), மரு.மு.சங்கரி (காசநோய்), மாவட்ட எச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்க தலைவர் கே.எம்.இராமசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர்ப.ஜெய்சங்கர், வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu