தூய்மைப்பணியாளர்களுக்கு கையுறை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்
புதுக்கோட்டை மாவட்ட தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து நடந்த ஆய்வு க்கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன்
புதுக்கோட்டை மாவட்ட தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் , தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் கலந்து கொண்டு , துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
பின்னர் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் நலனிற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் நாள்தோறும் சேகரமாகும் டன் கணக்கிலான குப்பைகளை அகற்றி வருகின்றனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மிக உன்னதமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களின் நலனிற்காக அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றுசேரும் வகையிலும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் குறித்து தூய்மைப் பணியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தூய்மைப்பணியாளர்களுக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட துறைகளின்கீழ் பணியாற்றிவரும் தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரம் குறித்தும், அவர்களுக்காக செயல்படுத்தப்படும் சேமநல நிதி, காப்பீடு திட்டம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
தூய்மைப்பணியாளர்கள் பணிபுரியும்போது அவர்களுக்கு வழங்கப்படும் கையுறை, சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பணிபுரிவது அவசியம் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஒப்பந்த நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஒப்பந்தத்தின்படி அவர்களுக்கான சலுகைகள் உரிய காலத்திற்குள் வழங்கப்படுவது குறித்தும், பணிபுரியும் போது அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப் படுவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கு முழுமையாக சென்று சேர்வதை துறைசார்ந்த அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.
முன்னதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர், புதுக்கோட்டை நகராட்சி, தூய்மைப் பணியாளர்களுக்கான குடியிருப்பினை நேரடியாக சென்று ஆய்வு செய்து, அவர்க ளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர், நகராட்சி பொறியாளர் இப்ராஹிம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu