விநாயகர் சதுர்த்தி : புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி : புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள  விநாயகர் சிலைகள்
X

புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலை

கணபதி அவதரித்த தினமாக ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது

முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். கணங்களின் தலைவனாக விளங்கும் கணபதி அவதரித்த தினமாக ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 15-ஆம் தேதி புதன் கிழமை (ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி) கொண்டாடப் படுகிறது. விநாயகர் என்றாலே அனைத்து வினைகளும் விலகும் என்பார்கள். அவர் அவதரித்த நாள் மிகவும் விசேஷமானது என்றாலும், அந்த நாளில் வரும் நல்ல நேரத்தில் பூஜை செய்வதால் கூடுதல் சிறப்பாக அமையும். நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடக்கூடிய ஒரு சில முக்கிய பண்டிகைகளில் பிள்ளையார் சதுர்த்தியும் ஒன்று. கணபதிக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில் புதுக்கோட்டை நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயில் சந்நிதி வீதியில் உள்ள கடைகளில் விநாயகர் சதுர்த்திக்காக பலவிதமான பலவண்ணங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

இது குறித்து பூஜை பொருள் விற்பனையாளர் சேகர் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சகஜ நிலை திரும்பிக் கொண்டிருக் கிறது. இதன் காரணமாக தற்போது வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவிழாக்கள், தேரோட்டங்கள் விமரிசையாக நடக்கின்றன.

பக்தர்களும் உற்சாகத்துடன் கோயில் விழாக்களிலும், ஆன்மீக நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா முன் எப்போதும் இல்லாத வகையில் பிரமாண்டமாகக் கொண்டாட பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அதனால், விநாயகர் சிலை விற்பனையும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றார் சேகர்.

Tags

Next Story